search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே விபத்தில் மாமியார், மருமகன் பலி
    X

    மத்தூர் அருகே விபத்தில் மாமியார், மருமகன் பலி

    மத்தூர் அருகே இன்று காலை ஆம்புலன்ஸ் வேன் மோதி மாமியார், மருமகன் இறந்துள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பிள்ளக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணி என்கின்ற லட்சா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவரது மருமகன் சுரட்டையன் என்கின்ற ராஜமாணிக்கம் (வயது 36). கூலி தொழிலாளி.

    இந்த நிலையில், மாமியார் காளியம்மாளும், மருமகன் சுரட்டையனும் இன்று காலையில் வீட்டில் வளர்த்து வரும் 10 கோழிகளை பிடித்துக் கொண்டு, அதனை போச்சம்பள்ளி வாரச் சந்தையில் விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    பிள்ளக்கொட்டாயில் இருந்து போச்சம்பள்ளியை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் பின்னால் மாமியார் காளியம்மாள் அமர்ந்திருந்தார். மருமகன் சுரட்டையன் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்றார்.

    மத்தூர், கண்ணன்ட அள்ளி அருகே சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காளியம்மாள் மற்றும் மருமகன் சுரட்டையன் ஆகிய இருவரும் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவர் யாபு அங்கிருந்து தப்பி ஓடி, மத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இதற்கிடையே விபத்தை நேரில் கண்ட அந்த பகுதியில் வயல் மற்றும் தோட்டங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள் பயத்தில் அலறினார்கள். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

    இது குறித்து மத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான காளியம்மாள் மற்றும் சுரட்டையன் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் யாபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் இன்று காலையில் பெண்கள் பூ பறித்துக் கொண்டிருந்தனர். விபத்தை நேரில் பார்த்த அந்த பெண்கள் கூறியதாவது:–

    ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளின் மீது அந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தை கண்டதும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியதால் தான் இந்த விபத்து நேர்ந்தள்ளது என கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான கர்நாடக மாநிலம் பெங்களூர் காவல் சந்திரா ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்த யாபு(வயது 39) விபத்து பற்றி கூறியதாவது:–

    பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துக்கொண்டு, திருவண்ணாமலைக்கு சென்று, அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்து விட்டு திரும்ப பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தேன். இன்று காலையில் கண்ணன்ட அள்ளி அருகே வந்தபோது என்னை முந்திக் கொண்டு ஒரு லாரி வேகமாக சென்றது. அதை நான் முந்துச் செல்ல முயன்றேன். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×