search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி அமையாவிட்டால் 25 தொகுதிகளில் தனித்து போட்டி: நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் பேட்டி
    X

    கூட்டணி அமையாவிட்டால் 25 தொகுதிகளில் தனித்து போட்டி: நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் பேட்டி

    கூட்டணி அமையாவிட்டால் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் கூறினார்.
    சென்னை :

    சென்னை வடபழனியில் உள்ள தனியார் ‘ஸ்டுடியோ’ ஒன்றில், நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க கடந்த 2 மாதங்களாக பேசியும் உடன்பாடு ஏற்படாததால் 2 மாத காலம் விரயம் ஏற்பட்டது. இதை ஒன்றும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில், எங்கள் சுயமரியாதையை இழந்து கூட்டணி அமைக்க விரும்பவில்லை.

    2 மாத காலம் விரயமானது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்த 2 மாதத்தில் மக்களிடம் சென்று பல விஷயங்களை கூறியிருக்க முடியும். இப்போது நேரம் குறைவாக இருப்பதால், ‘பார்முலா-1’ கார் பந்தயம் போன்று வேகமாக செயல்படுவோம்.

    தனிநபரை கார்த்திக்கோ, நாடாளுமன்ற கட்சியை சார்ந்தவர்களோ விமர்சனம் செய்ய மாட்டோம். தவறான வார்த்தைகளை அள்ளி கொட்டினால் திருப்பி அள்ள முடியாது. நல்ல வார்த்தைகளை கொட்டினால் அள்ள தேவையில்லை.

    தற்போது 3 பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி யாருடன் என இன்னும் 2 நாட்களில் அறிவிப்பேன். கூட்டணி அமையவில்லை என்பதற்காக துவண்டு விடுபவர்கள் நாங்கள் அல்ல.

    கூட்டணி அமையாத பட்சத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கடையநல்லூர், உசிலம்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), அருப்புக்கோட்டை, திருவாடானை, முதுகுளத்தூர், ராமநாதபுரம், போடிநாயக்கனூர், கம்பம், ராயபுரம், மயிலாப்பூர், உதகமண்டலம் உள்பட 25 தொகுதிகளை தெரிவு செய்து வைத்துள்ளோம். அந்த தொகுதிகளில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.

    இது தவிர, எனக்கு தெரிந்து மிகவும் நல்லவர்கள் யாரேனும் நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் போட்டியிடுவார்களே ஆனால், அவர்கள் எந்த கட்சி சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்காக பிரசாரம் மேற்கொள்வேன். ஏனெனில், சட்டசபைக்கு நல்லவர்கள் செல்ல வேண்டும்.

    நான் மிகவும் சுதந்திரமானவன், என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கூட்டணி உடன்பட்டாலும் நான் யாருக்கும் அடிமை அல்ல. பண பலம் இல்லை என்றாலும், மனபலம் அதிகம் உள்ளது. எனவே யாரிடமும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×