search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் பணி செய்யவில்லை பதவியை காப்பாற்றவே அமைச்சர்கள் போராடுகிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    மக்கள் பணி செய்யவில்லை பதவியை காப்பாற்றவே அமைச்சர்கள் போராடுகிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

    அமைச்சர்கள் மக்கள் பணிகளை செய்யாமல் தங்களது பதவியை காப்பாற்றவே போராடுகிறார்கள் என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    திருவிடைமருதூர்:

    பாபநாசம் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழா கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. செயல் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்து பேசியதாவது:-

    நமது உயிரை காக்கும், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்ய வேண்டும்.

    நாம் போராட்டம் அறிவித்த நாளில் இருந்து ஒரு சிலரை தவிர அனைத்து கட்சியினரும், அமைப்புகளும், வியாபாரிகள், தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா நடிகர்கள், ஓட்டுனர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எனவே நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெறும்.

    தமிழக மக்கள் குடிக்க தண்ணீர் கேட்டு போராடி வருகிறார்கள். அவர்களின் தாகம் தீர்க்காத தமிழக அரசு மது குடிக்க வைக்க நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி சாலையாக மாற்றி மதுக்கடைகளை திறந்து முயற்சி செய்து வருகிறது.

    தமிழகத்தில் 6 மாதத்தில் 3 முதல்-அமைச்சர்களை சந்தித்து இருப்பது ஜனநாயக படுகொலை. அமைச்சர்கள் மக்கள் பணிகளை செய்யாமல் தங்களது பதவியை காப்பாற்றவே போராடுகிறார்கள்.

    அனைத்து இடங்களிலும், அரசு வேலைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. நீங்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமைதியாக இருப்பதால் இது மாற்றத்தை உருவாக்குவதாக அமையும்.


    தண்ணீரை பாதுகாக்க வைகை அணையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் போடுகிறார். அவர் காரில் ஏறுவதற்கும் தெர்மா கோல் கரைக்கு வந்து விட்டது.

    ஜெயலலிதா இறந்த பின்னர் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அமைச்சர்கள் கூறினார்கள். இறந்த யாருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க முடியாது என்று அமைச்சர்களுக்கு தெரிய வில்லை.

    திருமண விழாவில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, எல். கணேசன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர்கள் கல்யாண சுந்தரம் ( வடக்கு), துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. (தெற்கு) எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி. செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×