search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்
    X

    பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்

    தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டம் மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகும் இங்கு தமிழகத்தில் நாளை (25-ந் தேதி) எதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்? விவசாயிகளின் துயர் துடைப்பதாக கூறி விட்டு அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்க கூடாது.

    முழு அடைப்பு நடத்தி தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் தான் ஆட்சியில் அமர பகல் கனவு காணும் தி.மு.க.விற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்க வேண்டும்.



    கடந்த காலங்களில் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் செய்த தவறுகளை மறைக்கவே தற்போது முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் நாடகம் இதில் சர்வகட்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டணி நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறிக் கொள்ளும் திருநாவுக்கரசரின் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள இவர்கள் உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதும், ராகுல்காந்தி நதி நீர் இணைப்பு சாத்தியம் இல்லை என்று கூறுவதைக் கண்டிக்க மறந்த தி.மு.க., மோடியின் அரசை வழக்கம் போல் வசைபாடுவதும் ஏன்?

    கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதும், காவிரியின் குறுக்கே பல தடுப்பணைகள் கர்நாடகம் கட்டியபோது கண்டிக்க தவறியதும், காவிரி நீர் உரிமை வழக்கை இந்திராகாந்தியின் காங்கிரஸ் கூட்டணிக்காக உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது போன்ற துரோக வரலாறுகளை கொண்ட தி.மு.க. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு வே‌ஷம் போடுவது ஏன்?

    மதவாதி என்று குற்றம் சாட்டும் ஜாதியவாதிகள், ஜாதி கட்சி தலைவர்கள், பிரிவினைவாதிகள், இன்று தேசம் முழுவதும் தேடினாலும் காணக் கிடைக்காத கம்யூனிஸ்டுகள் இவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டிய “சுயநல கூட்டணி” கரைந்து கரை சேர கட்டுமரத்தை தேடி சென்றவர்கள் பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்க தகுதி அற்றவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.



    வட மாநிலங்களில் தொடங்கி இந்தியா முழுவதும் வலுப்பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் அசுர வெற்றிகளை கண்டும், தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கண்டு மிரண்டு போய் விவசாயிகளின் பெயரை சொல்லிக் கொண்டு கூட்டணி அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    Next Story
    ×