search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்கொல்லையில் 22-ந்தேதி அனைத்து கட்சி பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்
    X

    மாங்கொல்லையில் 22-ந்தேதி அனைத்து கட்சி பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்

    சென்னை மயிலை மாங்கொல்லையில் 22-ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார்.

    ரமணா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 1000 தண்ணீர் குடங்களை வழங்கினார். திருப்பதி நகர் தி.மு.க. செயலாளர் மறைந்த பாஸ்கரனின் உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    இதனையடுத்து மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதுமே குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை இந்த அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

    கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் குடிநீர் பிரச்சினையால் தவிக்கும் மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள உதவும் வகையில் 10,000 குடிநீர் குடங்களை வழங்கும் பணியைத் தொடங்கி இருக்கிறோம்.

    அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த சென்னையிலும் இதுவரையில் 835 எம்.எல். குடிநீர் தினந்தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு, அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள் என இடைவெளி விட்டு 550 எம்.எல். குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்போதுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு அது மேலும் குறைக்கப்பட்டு இரு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை 400 எம்.எல். குடிநீர் வழங்கப்படும் நிலை வந்திருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, பருவமழை பொய்த்து குடிநீர் தட்டுப்பாடு வந்த நேரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் கல்குவாரிகளில் தேங்கும் நீர், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் இருந்தும் அதேபோல நிலத்தடி நீரை பெறும் வகையில் இந்தியா மார்க் பம்ப் 2 திட்டம் உள்ளிட்ட பல பணிகள் எல்லாம் அப்போது மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் குடிநீருக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக எல்லா பிரச்சினைகளுக்குமே மக்கள் போராடக்கூடிய நிலை ஏற்பட்டு தமிழகமே தத்தளித்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இந்த அரசு இல்லை.

    இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் காரணத்தால் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் பங்கேற்று பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

    குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 25-ந்தேதியன்று தமிழகம் தழுவிய ஒரு முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதென தீர்மானித்து அறிவித்திருக்கிறோம்.

    நேற்றைய தினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கும் வகையில் எதிர்வரும் 22-ந்தேதி சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்றைய தினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

    கேள்வி:- டி.டி.வி.தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் டெல்லியில் சில அதிகாரிகளை அச்சுறுத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.டி. வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- இது அவர்களுடைய கட்சியின் பிரச்சினைகள். இதில் தேவையின்றி தலையிட்டு விமர்சிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    கேள்வி:- வணிகர் சங்க மாநாடு நடைபெறுவதால் கடையடைப்புப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளாரே?

    பதில்:- நேற்றைய தினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தீர்மான விவரங்களையும், அது தொடர்பான வேண்டுகோள் கடிதத்தையும் அனுப்பி வைத்திருக்கிறோம். இந்தப் போராட்டத்துக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×