search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: முதல் அமைச்சர்
    X

    வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: முதல் அமைச்சர்

    வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு தகுந்த ஏற்பாடு செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப சபாநாயகர் அனுமதி அளித்தார்.

    முதலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கொண்டு வந்த இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து ராஜேந்திரன் (தி.மு.க.) பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முத்து கிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் தனது நண்பர் வீட்டுக்கு சாப்பிட சென்ற அவர் அந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

    ஏற்கெனவே இவர் ஐதராபாத்தில் படித்த போது அங்கு தற்கொலை செய்து கொண்ட மாணவருக்காக நீதி கேட்டு போராடியவர். எனவே தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. அதில் மர்மம் இருக்கிறது என்று அவரது தந்தை கூறி இருக்கிறார்.


    ஏற்கெனவே திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் இதே போன்று டெல்லியில் மருத்துவப்படிப்பு படித்த போது தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    மாணவர் முத்து கிருஷ்ணன் 10.7.2017 அன்று தனது முகநூல் பதிவில் இங்கு கல்வி பயில்பவர்கள் சமத்துவமாக பார்க்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே இவரது தற்கொலைக்கு தூண்டுதல் காரணமா? அல்லது மரணத்துக்கு வேறு காரணம் உண்டா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களில் பாதுகாப்பாக படிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக உயர் அதிகாரிகள் மற்றும் உயர் கல்விக்குழு அமைத்து வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களை கண்காணித்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர் முத்துகிருஷ்ணன் 13.3.2017 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தேன். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 பேரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாணவரின் குடும்பத்துக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம வழங்கப்பட்டுள்ளது. மாணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் அரசு மூலம் செய்யப்பட்டது. மாணவன் தந்தை ஜீவானந்தத்தை அமைச்சர்களும் அதிகாரிகளும் சொந்த ஊருக்கே சென்று சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார்கள்.

    மாணவரின் இறப்பு குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் உடனிருந்தே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார். வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு தகுந்த ஏற்பாடு செய்யும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×