search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி. தினகரன் போட்டியை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு
    X

    டி.டி.வி. தினகரன் போட்டியை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் போட்டியை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்நிலையில், டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து, பி.ஏ. ஜோசப் மற்றொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அது தொடர்பாக மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

    அந்நிய செலாவணி சட்டப்படி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி இதே குற்றங்களுக்காக அபராதம் விதித்தாலும் அவையும் குற்றவியல் தண்டனைக்கு இணையானவையே.

    ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் மீதும் இதே குற்றச்சாட்டு உள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த சூழலில் டி.டி.வி. தினகரனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்க தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலு வாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காரராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டார்.

    இவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘அன்னிய செலாவணி வழக்கில் அபராதம் கட்டியவர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று புதிதாக ஒரு கண்டு பிடிப்பை கண்டு பிடித்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டனர்.

    பின்னர், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், அன்னிய செலாவணி வழக்கில் அபராதம் செலுத்தியவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வருவது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. அதே நேரம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசு தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
    Next Story
    ×