search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘இரட்டை இலை’ சின்னம் கேட்டு தேர்தல் கமி‌ஷனில் ஓ.பி.எஸ். அணி மனு
    X

    ‘இரட்டை இலை’ சின்னம் கேட்டு தேர்தல் கமி‌ஷனில் ஓ.பி.எஸ். அணி மனு

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று மீண்டும் ஓ.பி.எஸ் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறது. இரு அணியினரும் நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறார்கள்.

    தற்போது ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக சசிகலா அணி சார்பில் தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் இரு அணியினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது சின்னம் ஒதுக்கீடு செய்வதற்காக தலைவரின் அத்தாட்சி கடிதத்தையும் சேர்த்து வழங்குவார்கள். தினகரனை பொறுத்தவரை தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா கையெழுத்திட்ட அத்தாட்சி கடிதத்தை வேட்புமனு தாக்கலின் போது கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.



    கடந்த புதன்கிழமை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நஜீம் ஜைதியை சந்தித்து தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.



    இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் ஓ.பி.எஸ் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம். ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். தேர்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின் படி மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட வேண்டும்.

    சசிகலா தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது. சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க. அடிப்படை விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.

    எனவே சசிகலாவின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்பதால் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. எனவே எங்களுக்காக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மனோஜ்பாண்டியன் தேர்தல் கமி‌ஷனரிடம் கொடுத்தார். இந்த மனுவில் வேட்பாளர் மதுசூதனன் மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கையெழுத்து போட்டு உள்ளனர்.

    இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக தினகரன் அறிவித்துள்ளார். அவர் தரப்பினர் கூறுகையில், அ.தி.மு.க.வுக்கு இப்போது சசிகலாதான் பொதுச் செயலாளர்.

    அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரமும் அவரிடம்தான் உள்ளது. அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி‌ஷயத்தில் வேறு எந்த முடிவையும் எடுக்க சட்டத்தில் இடமில்லை. அ.தி.மு.க. கட்சி பிளவு படவும் இல்லை.

    ஓ.பி.எஸ். உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே ஓ.பி.எஸ். தரப்பினர் கொடுத்துள்ள மனுவை தேர்தல் கமி‌ஷன் நிராகரித்து விடும். தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று சசிகலா தரப்பினர் நம்பிக்கையில் உள்ளனர்.

    இந்த வி‌ஷயத்தில் தேர்தல் கமி‌ஷன் இரு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டே நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இரு தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்து பார்த்து அடுத்த வாரம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×