search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்
    X

    அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்

    அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.

    நேற்று முதல் மதுசூதனன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா பொதுச் செயலாளராக இருப்பது முறையற்றது என்ற கருத்தினை தெரிவித்தார்.

    இந்நிலையில், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

    அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் இ.மதுசூதனன் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.



    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், “என்னை யாரும் நீக்க முடியாது, என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று கூறினார்.

    மேலும், “கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் சசிகலாவை நீக்கி விட்டேன்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×