search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை விட்டு சசிகலா வெளியேற வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்
    X

    அ.தி.மு.க.வை விட்டு சசிகலா வெளியேற வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

    ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவும், அவரது உறவினர்களும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த நிகழ்வில் பொதுமக்களை போலவே எனக்கும், ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.

    அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் பன்னீர்செல்வம். தற்போது அவர் முதல்- அமைச்சராக உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் மிரட்டல் விடுப்பதா? இதை என் போன்றவர்களால் ஏற்க முடியாது.

    ஜெயலலிதா உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தபோது, ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்களே சுற்றி நின்றனர். இதனால் தான் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது என்று நான் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.

    ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவும், அவரது உறவினர்களும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. தொண்டர்கள் பெரிய போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.

    பொதுவாக குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் 30 நாட்கள் கழித்துதான் நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஆனால் சசிகலா உடனே கட்சி பொறுப்பிற்கு வந்து விட்டு இப்போது முதல் அமைச்சர் பதவிக்கும் வரத்துடிக்கிறார்.

    சசிகலா சொன்னதை கேட்டு ஜெயலலிதா ஒருபோதும் செயல்பட்டது இல்லை. ஜெயலலிதா சர்வதேச அளவில் சிறந்த அரசியல்வாதி. சசிகலாவால், ஜெயலலிதாவிற்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டது. சசிகலாவிற்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்து விட்டார்கள். இனி அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×