search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது: சட்டசபையில் மசோதா தாக்கல்
    X

    உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது: சட்டசபையில் மசோதா தாக்கல்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது என சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தமிழ்நாடு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி திருத்த சட்ட முன் வடிவுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார்.

    அந்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர்களின் பதவிகளில் உள்ள சாதாரணமான காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக அறிவிக்கை வெளியிட்டது.

    இதற்கிடையில் மேற்சொன்ன அறிவிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதனுடைய ஆணையில், மற்றவற்றுக்கிடையில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்னதாக தேர்தலை நடத்தவும் மற்றும் அத்தேர்தல் பணியை செய்து முடிப்பதற்கு புதிய அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது.

    தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதாலும் அவற்றை ஐந்தாண்டு காலத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதாலும் தேர்தல் நடத்தப்படுகின்ற வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை அமர்த்துமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களை செயல்படுத்துவதற்கு மற்றும் செயற்பணிகளை செய்து முடிப்பதற்கு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994), 2016-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டத்தால் (தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 1/2016) திருத்தம் செய்யப்பட்டது.

    மேற்சொன்ன தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2016 தொடங்கிய தேதிக்குப் பிறகு மேற்சொன்ன ஊராட்சிகளுக்கு சாதாரண தேர்தல் நடைபெற்று ஊராட்சிகளின் முதற்கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை இதில் எது முந்தியதோ அதுவரை மேற்கண்ட 1/2016 தமிழ்நாடு அவசரச் சட்டத்திற்கிணங்க கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளை நிர்வகிப்பதற்கு தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர்.

    அப்போது இம்மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடை பெறாததால் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச் சட்டமொன்றைப் பிறப்பிப்பது தேவையானதாக ஆயிற்று.

    அதன்படி 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் அவசர சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2016) ஆளுநரால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ம் நாளன்று பிறப்பிக்கப்பட்டு அது 2016-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் தேதியிட்ட நாளில் தமிழ்நாடு அரசு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

    1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதிகளின் 14 ஆம் விதியின்படி ஊராட்சி வாக்காளர் பட்டியலுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாக இருக்கின்றது.

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க சீராய்வு 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறக்கூடியதாக இருக்கும்.

    சட்டமன்றப் பேரவையின் வாக்காளர் பட்டியல்கள் பெறப்பட்டதன் பேரில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சாதாரணமான தேர்தல்களை நடத்தும் நோக்கத்திற்காக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட இயலும்.

    2017-ஆம் ஆண்டு மார்ச் 2-ம் நாள் மற்றும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு 12-ம் வகுப்பு (எச்.எஸ்.சி.) மற்றும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி. ) உள்ளடங்கலாக நடைபெறும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்துக் கொண்டிருப்பர்.

    அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிகளுக்காக அமர்த்த முடியாது மிகப் பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் கணக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று தனி அலுவலர்களின் பதவி காலம் முடிவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவல்களை நிர்வகிக்க பொருத்தமான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

    இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் ஆணையராக இருக்கும் அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

    தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு அப்பால் 2017-ம் ஆண்டு ஜுன் 30-ந்தேதி வரை 6 மாத காலத்திற்கு தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீடிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாததால் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டியதாயிற்று.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே காரணத்துக்காக மாநகராட்சி, நகராட்சி திருத்த சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

    சட்ட மசோதாவை தி.மு.க.-காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியினர் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×