search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரின் அத்துமீறல் புகார் மீது முழு விசாரணை நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
    X

    போலீசாரின் அத்துமீறல் புகார் மீது முழு விசாரணை நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

    சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகார் மீது முழு விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சட்டசபையில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம் வருமாறு:-

    சென்னை மாநகரில் ஆங்காங்கு சட்டவிரோத கும்பல்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், காவல் ஆளிநர்களைத் தாக்கியும், காவல் வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து போக அறிவுறுத்தியும், கலைந்து செல்ல மறுத்து வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்த பட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் கலைத்தனர்.

    இதனால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இச்சம்பவங்களின் போது காவல்துறையினர் பெருமளவில் காயமடைந்தனர். மேலும் பல காவல் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டும், கல்வீசியும் சேதப்படுத்தப்பட்டன.

    சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினர் 142 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 138 பேரும் காயமடைந்தனர். அவர்களில் காவல் துறையினர் 68 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 41 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 19 காவல் வாகனங்கள், இரண்டு தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் ஒரு சிறைத்துறை நான்கு சக்கர வாகனம், ஒரு மாநகர அரசுப் பேருந்து ஆகியவை எரிந்து சேதமாகின. இது மட்டுமல்லாமல், வி‌ஷமிகளால் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 29 இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டு சேதமாகின.

    மேலும், 15 காவல் துறை வாகனங்கள், 41 பிற அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள் வன்முறையில் சேதமடைந்தன. சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பொது இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மாநிலத்தில் மதுரை மாநகர், மதுரை மாவட்டம், கோவை மாநகர் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் காவல் துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைதியாக கலைந்து சென்றனர்.

    சேலம் மற்றும் மதுரை மாநகரில் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களைக் கலைந்து போக செய்து, ரயில் போக்குவரத்தை சரி செய்தனர்.

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் விழாக் குழுவினர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த பிறகும், ஒரு கும்பல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதுமின்றி, காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை காவல் துறையினர் குறைந்த பட்ச பலத்தை உபயோகப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

    கோயம்புத்தூர் மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று, காந்திபுரம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர்.

    ஜல்லிக்கட்டு போராட்டங்கள் காரணமாக சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின.

    சென்னை நீங்கலாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 27 காவல் ஆளிநர்களும், 4 அரசு பேருந்து பணியாளர்களும், 19 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், 7 காவல் வாகனங்கள், அரசு பேருந்துகள் உட்பட 50 அரசு வாகனங்கள், 2 தனியார் வாகனங்கள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் மெரினா கடற்கரையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 250 நபர்களிடமும் 24.1.2017 அன்று காலை, காவல் துறையினர் அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டதன் பேரில், அவர்கள் சிறிது சிறிதாக கலைந்து அன்று மாலை அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றோரால் நடத்தப்பட்டு வந்த போராட்டத்தின் இடையே தேச விரோத, சமூக விரோத, தீவிரவாத சக்திகள் ஊடுருவினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல விடாமல் அமைதியான போராட்டத்தை திசை திருப்பி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பல இடங்களில் அச்சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு காவல் துறையினரை தாக்கியும், காவல் நிலையங்கள், காவல் வாகனங்களுக்கு தீவைத்தும், சேதம் விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய போதும் காவல் துறையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தூப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற பலப்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடாமல் குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்து பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் ஏற்படாமல் அச்சக்திகளைக் கலைத்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    ஜல்லிக்கட்டு நடைபெற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்ட மகிழ்ச்சியை, இதற்கு பங்களித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அனுபவிக்க முடியாதபடி சமூக விரோதிகள் செய்து விட்டனர்.

    சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது, சட்டவிரோதமாக செயல்பட்ட சமூகவிரோத கும்பல்களை கலைக்கும் போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக சில காணொளி பதிவுகள் பல்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றசாட்டுகள் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வழக்குகள் விசாரணையின் போது அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையில் ஈடுபட்ட தீயசக்திகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×