search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  போலீஸ் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
  X

  போலீஸ் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

  மாணவர்கள் போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய போலீஸ் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஜனவரி 17-ந் தேதியிலிருந்து நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றதும், அவர்களை எல்லாம் மாணவர்களும், இளைஞர்களும் பத்திரமாக பாதுகாத்ததும் நாடு முழுவதும் பாராட்டப்பட்டதை அ.தி.மு.க. அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

  ஆட்டோக்களுக்கு போலீசாரே தீ வைக்கும் காட்சிகள், பெண்கள் கையில் இருக்கும் தண்ணீர் குடங்களை பறித்து உடைக்கும் காட்சிகள், வீடுகளுக்குள் புகுந்து போராட்டக்காரர்களை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி இழுத்து வரும் காட்சிகள், பெண்களை சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள், இளைஞரை போலீசாரே கொடூரமாக தள்ளி விடும் காட்சிகள், ஓரமாக நிற்கும் வாகனங்களை போலீசாரே உடைத்து நொறுக்கும் காட்சிகள், குடிசைகளுக்கு போலீசே தீ வைப்பது, வடபழனியில் துப்பாக்கி சத்தம் கேட்கும் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது அந்த செயல்களில் ஈடுபட்ட போலீசாருக்கு முறையாக “வழிகாட்டும் தலைமை” இன்றி மாநகர காவல்துறையும், மாநில காவல்துறையும் தவிப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு மோசமாக சீர்குலைந்து நிற்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் எல்லாம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

  அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தியவர்களை அதிகாலையில் அவசர அவசரமாக கலைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. மாலையில் சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறும் சூழலில், அந்த சட்டம் நிறைவேறிய பிறகு மாணவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

  ஆனால் ஏழு நாட்கள் அந்த போராட்டக்காரர்களை அன்புடன் காவல் காத்து நின்ற போலீசாரை வைத்தே இவ்வளவு பெரிய தாக்குதலை திடீரென்று அ.தி.மு.க. அரசு நடத்தியிருப்பதை ஜனநாயக நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை விட நேற்று முழுவதும் பல நியூஸ் சேனல்களை இருட்டடிப்புச் செய்து காவல்துறையின் அராஜகக் காட்சிகள் வெளிவராமல் தடுக்கும் விதத்தில் அ.தி.மு.க. அரசே முன்னின்று செயல்பட்டது வெட்கக்கேடானது.

  சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமையே தவிர, அறவழி போராட்டத்தை கலைக்க காவல்துறையே “சட்ட விரோத செயல்களில்” ஈடு படுவதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக தமிழுணர்வுக்காக, தமிழர்களின் பண்பாட்டிற்காக போராடியவர்களை “தேச விரோதிகள்” என்றும், “சமூக விரோதிகள்” என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்திருப்பதை இந்த நேரத்தில் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

  அறவழி போராட்டத்திற்குள் சமூக விரோதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்றால் மாநில உளவுத்துறை அதிகாரிகளும், ஏழு நாட்கள் காவல் காத்து நின்ற போலீஸ் அதிகாரிகளும் என்ன செய்தார்கள்?, அவர்களை அடையாளம் கண்டு ஏன் கைது செய்யவில்லை?, மாநகர காவல்துறைக்கு என்றே இருக்கின்ற உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி தமிழர்களின் பண்பாட்டு உரிமையை, கலாசார உரிமையை வென்று எடுத்து விட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்காக போராட்டத்தில் “சமூக விரோதிகளும்”, “தேச விரோதிகளும்” புகுந்து விட்டார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அபாண்டமாக பழி சுமத்தி, போராட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

  அமைதியான மாணவர்கள் போராட்டத்தை முறையாக கையாளத் தவறி, திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர், மாநில உளவுத்துறை தலைவர், மாநகர உளவுத்துறை பொறுப்பில் உள்ள அதிகாரி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து நியாயமான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும்.

  அதே சமயத்தில், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் போலீஸ் தடியடி நடைபெற்ற இடங்கள், ஆட்டோவுக்கு போலீசார் தீ வைத்த இடம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×