search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்- முத்தரசன் கண்டனம்
    X

    ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்- முத்தரசன் கண்டனம்

    ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிகோரி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிகோரி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது பொங்கல் கொண்டாட்டங்களை ஒத்தி வைத்துவிட்டு போராட்டக் களத்தில் தமிழ் ஆர்வலர்களும், திரையுலகினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று உரிமைக் குரல் எழுப்பிய நிலையில், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட பலர் மீது தமிழக காவல் துறை கடுமையான தடியடி நடத்தியிருப்பது மனிதநேயமற்ற கொடுஞ்செயல்.

    காவல்துறையின் இந்த அராஜகச் செயலை தி.மு.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தமிழர்களின் வீரவிளையாட்டை நடத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்வதில் கோட்டை விட்ட தமிழக அரசு, தனது காவல்துறையை ஏவி, தமிழர்கள் மீது தடியடி நடத்துவதும் சித்திரவதைகள் செய்வதும் தமிழினத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

    ஈவு இரக்கமற்ற இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உரிய நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களை அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு ஒடுக்கிவிட முடியாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.

    இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஜனநாயக முறையில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் தி.மு.க என்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:-

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்துள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று கடந்த ஓராண்டாகவே மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

    கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறி வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இப்போது ஜல்லிக்கட்டு சாத்தியமில்லை என்று இரட்டை வார்த்தையில் கூறிவிட்டு ஒதுங்கி விட்டனர். அதனால் ஏமாற்றமடைந்த மக்கள் கொந்தளிப்பில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவற்றின் தொடர்ச்சியாக மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. திரையுலகைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்ற இப்போராட்டத்தின்போது சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்ட நிலையில், தேவையே இல்லாமல் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஜல்லிக்காட்டுப் போட்டிகளுக்கு உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் தடை விதித்தால், அதுகுறித்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கூட மாநில அரசு தடைவிதிப்பது கேலிக் கூத்து.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மைய பூமியாக திகழ்வது மதுரை மாவட்டம் தான். ஆனால், அங்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கடந்த 11ஆம் தேதி மதுரை மாநகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

    12ஆம் தேதி சோழவந்தானில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அதரவாக குரல் கொடுத்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக கடந்த 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம்’’ என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீராவேசமாக கூறியிருந்தார்.

    ஆனால், அவரது கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறை இன்று அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது. இது தான் ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டும் லட்சனமா? தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்ட விழ்த்து விட்டாரா?

    மதுரை மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வட இந்தியராக இருக்கும் நிலையில் தமிழர்களின் கலாச்சார உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு மரியாதை கொடுக்காமல் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கையாளாக மாறி தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    மதுரையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தியதற்காகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடியடி நடத்த ஆணையிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:-

    மத்திய அமைச்சர்களும், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்தவே மத்திய அரசு விரும்புவதாகவும், அனுமதி கிடைத்துவிடும் என்றும் ஒவ்வோராண்டும் கூறி வருகிறார்கள். மூன்று ஆண்டுகளாகப் பொறுத்திருந்தும், அனுமதி கிடைக்க வில்லை.

    தாம் ஏமாற்றப்பட்டதாகவும், தமது பண்பாடு அலட்சியப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டு மக்கள் கருதுவதில் தவறேதும் இல்லை. அதற்கு ஆட்சே பனைகளைத் தெரிவிக்க தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் எழுவது முற்றிலும் இயல்பானதாகும்.

    இந்த ஆட்சேபக் குரல்களை அனுமதித்து, போராட்டங்களை ஒழுங்கு படுத்துவதே தமிழ்நாடு மாநில காவல்துறையின் பணியாக இருக்க முடியும். ஆனால் ஒரு எதிரி நாட்டு ராணுவம் போல, போராடும் மக்கள் மீது வன்மத்துடன் தடியடி நடத்துவதும், அடக்கு முறைகளைக் கட்ட விழ்ப்பதும் மிகத் தவறான அணுகு முறையாகும்.

    இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்குக் காரணமான அதிகாரிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாளான பொங்கலன்று தடையை மீறி அடையாளப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்த முனைந்தவர்கள் மீது காவல் துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் வேட்கக்கேடானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழக காவல்துறை, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்வர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டக்கொள்கிறேன்.

    Next Story
    ×