search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
    X

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் ஏற்றக்கொண்டதையடுத்து அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து கட்சியின் பொருளாளரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் சசிகலாவிடம் சம்மதம் பெற போயஸ் கார்டன் புறப்பட்டனர்.

    அப்போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கிறது. கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதம் பெற செல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகலை வழங்கினர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நேரில் வற்புறுத்தினார்கள்.

    தீர்மான நகலை சசிகலா கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டு அங்கிருந்த ஜெயலலிதா படத்தின் முன் வைத்து வணங்கினார். அப்போது சசிகலா உள்ளிட்ட நிர்வாகிகள் கண்கலங்கினார்கள்.

    சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. புரட்சி தலைவி ஜெயலலிதா ஆற்றிய அரும்பணிகளும், செய்த தியாகங்களும் தமிழக மக்கள் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசமும் நினைவு கூரப்பட்டது.

    கடந்த 33 ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் உற்றதுணையாக இருந்து அனைத்து நிலைகளிலும் நீடித்து நிலையாக நின்று பணிகளையும், கடமைகளையும் நிறைவேற்றியவர் சசிகலா. அவரை பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தெய்வீக தலமான வேதா நிலையத்தில் சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினோம். பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு அவரை கேட்டுக் கொண்டோம். முழுமனதோடு அவரும் ஏற்றுக் கொண்டார்.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இன்று முதலே சசிகலா பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். விரைவில் தலைமை கழகம் வந்து கட்சி பணியை தொடங்குவார்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

    பின்னர் அவரிடம் ஆட்சியில் மாற்றம் வருமா? என்று கேட்ட போது பதில் அளிக்க மறுத்து விட்டார்.
    Next Story
    ×