search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டபோது எடுத்த படம்
    X
    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டபோது எடுத்த படம்

    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. நடத்திய மனிதச் சங்கிலி போராட்டம்

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்று இம்மாதம் 8-ந் தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டது.

    இதனால், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் கால்கடுக்க நின்று வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க., ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து 24-ந் தேதி (அதாவது நேற்று) தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் நடந்த இந்த போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னையில் இந்த போராட்டம் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில், புரசைவாக்கத்தில் இருந்து ஓட்டேரி, பெரம்பூர் வழியாக கொளத்தூர் வரை தி.மு.க.வினர் சாலையோரம் கைகோர்த்து மனிதச் சங்கிலி அமைத்து நின்றனர்.

    இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், புரசைவாக்கம் டவுட்டன் அருகே போராட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், அங்கிருந்து திறந்தவெளி ஆட்டோவில் நின்றபடி, மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்ற வழியாக சென்று அதில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். பெரம்பூர் பேப்பர் மில் சாலையில், தி.மு.க. தொண்டர்களுடன் மனிதச்சங்கிலியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், பின்னர் அதே ஆட்டோவில் கொளத்தூர் வரை சென்றார்.

    இதேபோல், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில், நந்தனம் சிக்னல் முதல் விமான நிலையம் வரை சாலையோரம் தி.மு.க.வினர் கைகோர்த்து மனிதச் சங்கிலி அமைத்து நின்றனர். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில், அண்ணா சாலை பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை தி.மு.க.வினர் கைகோர்த்து நின்றனர்.

    மேலும், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில், தங்க சாலையில் இருந்து திருவொற்றியூர் வரை வழிநெடுக சாலையோரம் தி.மு.க.வினர் கைகோர்த்து நின்றனர். தி.மு.க. நடத்திய இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

    கூட்டணி கட்சிகளான திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் புரசைவாக்கம் பகுதியிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தேனாம்பேட்டை பகுதியிலும் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு, தொண்டர்களுடன் கைகோர்த்து நின்றனர்.

    மேலும், இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, தி.மு.க. மகளிரணி புரவலர் இந்திரகுமாரி, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்தவில்லை. இதனால், அன்றாடம் காய்ச்சிகள், நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள் பெரிய அளவில் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். அதை கண்டிக்கும் வகையில் தான் இந்த போராட்டத்தை தி.மு.க. நடத்தியுள்ளது.

    மக்கள் என் பக்கம் என்று மத்திய அரசும் சொல்லலாம். இங்குள்ள மாநில அரசும் சொல்லலாம். ஆனால், மக்கள் வங்கிகள் பக்கம் கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் எனவே, இதை உடனே சரிசெய்ய வேண்டும். ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அதே நேரத்தில் புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு வங்கிகளில் சில்லரை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வங்கிகளில் ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டை மாற்ற நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர். மத்திய அரசு ரூ.100, ரூ.500 புதிய நோட்டுகளை அதிகம் புழக்கத்தில் விட்டுவிட்டு, பின்னர் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தால் சங்கடம் இருக்காது. எனவே, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், கருப்பு பணத்திற்கு காரணமாக இருக்கக்கூடியவர்கள் இன்றைக்கு நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால், கருப்பு பணத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் ஏழை மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    எனவே, இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, இதுபற்றி பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து நிருபர்கள், மு.க.ஸ்டாலினிடம், “28-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “28-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டமானது தி.மு.க. அறிவித்த போராட்டமில்லை என்றாலும், மத்திய அளவில் இருக்கக்கூடிய, இந்திய அளவில் இருக்கக்கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தக் கூடிய போராட்டம். அந்த போராட்டத்திற்கு தி.மு.க.வும் துணை நிற்கும் என்ற வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் எதிரில் அந்த போராட்டம் நடைபெறும் என்று தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்” என்றார்.

    இதேபோல் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×