search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் பண மாற்றம்: அப்பாவிகள் மூலம் நடக்கும் மோசடியை தடுக்க வேண்டும் - ராமதாஸ்
    X

    வங்கியில் பண மாற்றம்: அப்பாவிகள் மூலம் நடக்கும் மோசடியை தடுக்க வேண்டும் - ராமதாஸ்

    அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் கருப்புப் பண முதலைகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.






    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் போதிய முன்னேற்பாடுகளை செய்யாமல், ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மற்றொருபுறம், அப்பாவி மக்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கருப்புப் பண முதலைகள் தங்களின் கருப்புப்பணத்தை வெளுப்பதும் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்களுக்கு பதிலாக போதிய அளவில் புதிய ரூபாய் தாள்கள் வெளியிடப்படாததால் பணப்புழக்கம் குறைந்து அனைத்து விதமான வணிகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வணிகம் மட்டுமின்றி வாழ்வாதாரமும், வாழ்க்கையும் பறிபோய் கொண்டிருக்கிறது.

    பணத்தை எடுப்பதற்காக வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்திருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டும், வேறு காரணங்களாலும் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணம், மத்திய அரசின் நடவடிக்கையால் பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தான்.

    பணம் இல்லாததால் மத்திய அமைச்சரே தமது சகோதரரின் உடலை வாங்க முடியாமல் தவித்தார் என் றால் மற்றவர்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    பணம் இல்லாததால் மக்கள் படும் அவதி ஒருபுறமிருக்க, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் அவற்றிடம் உள்ள கருப்புப் பணத்தை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அவர்களின் அனுமதி இல்லாமலேயே செலுத்தி வெள்ளையாக்கி திருப்பி எடுத்துக் கொள்கின்றன.

    ஆந்திராவின் விஜயவாடாவிலுள்ள காந்தி மகளிர் கல்லூரி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை செலுத்தப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன.

    இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட பணியாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர். தமிழகத்திலும் சில தனியார் கல்வி நிறுவனங்களில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் அதன் பணியாளர்கள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்ற போது, அதை வருமானவரித் துறை கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் ரூ.8 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    பழைய ரூபாய் தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய ரூ.500 தாள் சென்னையின் சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற ஊர்களை சென்றடையவில்லை.

    இதனால் வங்கிக் கணக்கில் பணமிருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தமிழக மக்கள் தவிக்கின்றனர். இதேநிலை நீடித்தால், உச்சநீதிமன்றம் எச்சரித்தவாறு கலவரம் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

    அதைத் தடுக்க தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய ரூ.500 தாள்கள் மற்றும் ரூ.100 தாள்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பி பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் கருப்புப் பண முதலைகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×