search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கான திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தது எப்படி?: மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    விவசாயிகளுக்கான திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தது எப்படி?: மு.க.ஸ்டாலின் கேள்வி

    விவசாயிகளுக்கான முன்னோடி திட்டத்தை ஜெயலலிதா எந்த விதியின் அடிப்படையில் அறிவித்தார் என்றும், மாநில அரசின் நிர்வாக விதிகளுக்கு இது முரணாக அமைந்திருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் கூட்டுறவு இயக்கமே அடியோடு ஸ்தம்பித்து நிற்கும் சூழ்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். அக்கூட்டத்தில், “தமிழக விவசாயிகள் எவ்வித சிரமும் இன்றி தங்களின் விவசாயப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக முதல்-அமைச்சர் 22.11.2016 அன்று முன்னோடி திட்டம் ஒன்றை அறிவித்தார்” என்று எடுத்து கூறி, கூட்டத்திற்கு வந்திருந்த துறை செயலாளருக்கும், கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

    விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதற்கு தமிழக அரசின் இந்த ஏற்பாடு ஏதாவது ஒரு வகையில் உதவும் என்றால் அதை வரவேற்பதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை. முழு மனதோடு வரவேற்கிறேன். ஏனென்றால் “4,490 -க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளதை” சுட்டிக்காட்டி, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் 16.11.2016 அன்றே அறிக்கை விட்டு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகள் கூட்டத்தில், “இத்திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்” என்று கூறிய கருத்து அரசு நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

    கடந்த செப்டம்பர் 22-ந் தேதியில் இருந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக தேக்க நிலைமை குறித்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பின. மாநிலத்தில், “அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசு நிர்வாகத்தை கவனிக்கிறார்களா” என்று எழுப்பிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் 11.10.2016 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    அந்த உத்தரவில், “முதல்- அமைச்சர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் இனிமேல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவை கூட்டங்களுக்கு ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார். ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பும் வரை இந்த நிர்வாக ஏற்பாடு தொடரும் என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அந்த உத்தரவு மருத்துவமனையில் இருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் அரசியல் சட்டப்பிரிவு 166(3)-ன் கீழ் பிறப்பிக்கப்படுகிறது என்றும் கவர்னர் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

    அதன் பிறகு இன்று வரை மருத்துவமனையில் இருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவோ, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிர்வாக ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவோ இதுவரை எந்த மறு உத்தரவும் கவர்னர் பிறப்பிக்கவில்லை. இப்படியிருக்க விவசாயிகள் தொடர்பான அரசின் முன்னோடி திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி அறிவித்தார்? அப்படி அறிவிக்கும் கோப்பு எந்த விதியின் கீழ் அவருக்கு அனுப்பப்பட்டது? சம்பந்தப்பட்ட துறை செயலாளர் அல்லது துறை அமைச்சர் எந்த அடிப்படையில் அப்படியொரு கோப்பை இலாகா இல்லாத முதல்-அமைச்சருக்கு அனுப்பிவைத்தார்கள் என்ற நியாயமான அரசியல் சட்ட கேள்விகள் எழுகின்றன.

    கவர்னர் வெளியிட்ட 11.10.2016 அன்றைய உத்தரவு மாற்றப்படவில்லை என்றால், “முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததாக” கூறும் திட்டமும், அதன் பேரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கூட்ட நடவடிக்கைகளும் முற்றிலும் அரசியல் சட்டத்திற்கும், மாநில அரசின் நிர்வாக விதிகளுக்கும் முரணாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கவர்னர் ஏற்படுத்திய நிர்வாக நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டு, அரசியல் சட்டப்படி அங்கீகாரம் இல்லாத நிர்வாகம் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அரசியல் சட்ட விரோத அரசு நிர்வாகம் மாநில நலனுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாக இருக்கிறது.

    ஆகவே விவசாயிகளின் நலன் கருதியும், மாநில அரசின் நிர்வாகம் அரசியல் சட்டப்படி நடைபெறுகிறது என்பதை உறுதி செய்யவும் கவர்னர் உடனடியாக தலையிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சரின் ஆய்வு கூட்டம் பற்றியும், செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பு குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×