search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித சங்கிலி போராட்டம்: இளைஞர் அணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்
    X

    மனித சங்கிலி போராட்டம்: இளைஞர் அணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

    24-ந்தேதி மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர் அணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், கழக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு “500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று அறிவித்து, கடந்த 8-11-2016 அன்றிலிருந்து மக்களுக்கு தாங்க முடியாத இன்னல்களை உருவாக்கியிருக்கிறது.

    மக்கள் அனைத்து வங்கிகள் முன்பும், வங்கி ஏ.டி.எம்.கள் முன்பும் கடந்த 12 நாட்களாக கால் கடுக்க நிற்கிறார்கள். ஊழலை நீக்க “கறுப்புப் பணம் ஒழிப்பு” என்ற மிக முக்கியமான, வரவேற்கக் கூடிய கொள்கை முடிவை வேறு எந்த ஒரு அரசும் இப்படி அவசர கோலத்தில் அமல்படுத்தியிருக்க முடியாது என்ற ரீதியில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை படு மோசமாக அமைந்து விட்டது.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இல்லத்தரசிகள் அனைவரும் ஒரு சில ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு வரிசையில் பசியும், பட்டினியுமாக நின்றுக் கொண்டிருக்கின்ற காட்சி வேதனையளிப்பதாக இருக்கிறது.

    அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் “எங்கள் மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்” என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் வருகிறார்கள்.

    கேரள முதல்-அமைச்சர் பினராய் விஜயன் அங்குள்ள ரிசர்வ் வங்கி முன்பே போராட்டம் நடத்தியிருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரிசர்வ் வங்கிக்கே சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் தன் மாநில மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “எங்கள் மாநில மக்களின் பண பரிவர்த்தனைக்கு உதவியாக 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனே ஆந்திராவில் உள்ள வங்கிகளுக்கு அனுப்புங்கள்” என்று ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

    ஆனால் தமிழகத்திலோ முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் செயல்படுகிறாரா? மாநிலத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா, குறிப்பாக மக்களின் இன்னல்கள் பற்றி கவலைப்படும் ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழும் அளவிற்கு அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் முழுமையாக, மோசமாக முடங்கிக்கிடக்கிறது.

    தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்கள் யாரும் ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் மக்கள்படும் அவதி குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசவே தயாராக இல்லை என்பதை விட எழுப்பினால் நமக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் படும் துயரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி மக்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆகவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.

    தமிழக மக்கள் படும் இன்னல்களையும், இடர்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவிக்கும் விதத்தில் நடைபெறும் இந்த மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கழகத்தின் இளைஞர் அணியினர் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ள இந்த மிக முக்கியமான போராட்டத்தை மாபெரும் வெற்றிப் போராட்டமாக்கிட வேண்டுமென்று அனைத்து இளைஞரணி தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×