search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது: 3 தொகுதிகளில் தலைவர்கள் முற்றுகை
    X

    தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது: 3 தொகுதிகளில் தலைவர்கள் முற்றுகை

    3 தொகுதி தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று வெளியானதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்காக முற்றுகையிட உள்ளனர்.
    சென்னை:

    தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி (அ.தி.மு.க.), அஞ்சுகம் பூபதி (தி.மு.க.), ராமலிங்கம் (பா.ஜ.க.), அப்துல்லாசேட் (தே.மு.தி.க.) குஞ்சிதபாதம் (பா.ம.க.) உள்பட 14 பேர் போட்டியிடுகின்றனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.), கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.), முத்து (தே.மு.தி.க.), பிரபு (பா.ஜ.க.), பாஸ்கரன் (பா.ம.க.) உள்பட 39 பேர் போட்டியிடுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), தனபாண்டியன் (தே.மு.தி.க.), ஸ்ரீனிவாசன் (பா.ஜ.க.) உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர். நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி (காங்கிரஸ்), ஓம்சக்தி சேகர் (அ.தி.மு.க.) உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் 3 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு 11 நாட்களே இருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்துக்காக 3 தொகுதிகளில் முற்றுகையிட உள்ளனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்-அமைச்சரின் இலாகாக்களை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதியில் முகாமிட்டு பிரசார பணிகளை ஒருங்கிணைத்து ஓட்டு கேட்டு வருகிறார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட தென் மாவட்ட அமைச்சர்களும் முகாமிட்டு வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., ஓ.எஸ்.மணியன், வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நடிகர், நடிகைகளும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

    3 தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதே போல் கனிமொழி எம்.பி.யும் பிரசாரம் செய்கிறார்.

    இவர்களுக்கான பிரசார தேதிகள் தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் நாளையும், நாளை மறுநாளும் தஞ்சை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் 10, 11 ஆகிய தேதிகளிலும் அரவக்குறிச்சி தொகுதியில் 13, 14 தேதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    இது தவிர தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் 3 தொகுதிகளிலும் முகாமிட்டு வீடு, வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் 12-ந் தேதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அவனியாபுரத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பேசுகிறார். திறந்த வேனிலும் அவர் வீதி வீதியாக ஓட்டு கேட்க உள்ளார்.

    இதேபோல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். தனது முதல் கட்ட பிரசாரத்தை அரவக்குறிச்சி தொகுதியில் இன்று மாலை தொடங்குகிறார்.

    மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஈச்சநத்தம் கிராமத்தில் திறந்த வேனில் பேசும் இவர், ஆண்டிப்பட்டி கோட்டை, அண்ணாநகர், பள்ளப்பட்டு, அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று ஓட்டு கேட்கிறார். நாளையும் பிரேமலதா அரவக்குறிச்சி தொகுதியில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    8, 9 ஆகிய தேதியில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார். இதேபோல் தஞ்சை தொகுதிக்கும் 16, 17 தேதிகளில் சென்று கிராமம் கிராமமாக பிரசாரம் செய்கிறார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 13, 14-ந் தேதிகளில் பிரசாரத்தை தொடங்குகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நாளை அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தஞ்சை தொகுதியில் 9-ந்தேதி பிரசாரம் செய்கிறார். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று பிரசாரம் செய்கிறார்.

    இது தவிர மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 40 பேர் கொண்ட நிர்வாகிகளும் 3 தொகுதிகளில் முகாமிட்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்-மந்திரி நாராயணசாமி (காங்கிரஸ்) வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தி.மு.க.வினரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    நெல்லித் தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நிற்கும் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் பலரும் முகாமிட்டு ஓட்டு கேட்டு வருகின்றனர். தலைவர்களின் வருகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
    Next Story
    ×