search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
    X

    உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

    உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரீகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம். அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், நமது இலட்சியங்களை மக்கள் மனதில் பதிய வைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்கு பிறகு சிறிதளவும் மனம் தளராமல் தமிழகம் முழுவதும் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தினர். நானும் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். இத்தகைய சூழ்நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு முயற்ச்சியில் ஈடுபட்டோம்.

    ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் களத்தை நாம் தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம். அதனடிப்படையிலேயே தற்பொழுது தனித்தே தேர்தலை சந்திக்கக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், மாவட்டம் தோறும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தகுந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, நிறுத்தி நாம் அனைவரும் முழு பலத்தோடு உழைத்து அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் த.மா.கா சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாமர மக்களும் தமிழை எளிதில் கற்று கொள்ளும் வகையில் எளிய தமிழால் தினத்தந்தி நாளிதழை தொடங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் பட்டியல் இன்னும் 2 நாளில் வெளியிடப்படும்.

    இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற வகையில் அனைத்து கட்சிகளுக்கும் கால அவகாசம் தராமல் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக தேர்தல் தேதியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    கூட்டணி தொடர்பாக தி.மு.க.வின் நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×