search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.தி.மு.க. அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    ம.தி.மு.க. அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    மக்கள்நல கூட்டணி சார்பில் அக்டோபர் 3-ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்: வைகோ பேட்டி

    ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 3-ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என்றும் வைகோ கூறினார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகிய 4 தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.15 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் 4 தலைவர்களும் கூடி விவாதித்தோம். ஏற்கனவே மாவட்ட அளவில் எங்கள் கூட்டணி சார்பில் இடங்களை பிரித்துக்கொள்வது குறித்து பேசி வருகிறோம். இதற்கிடையே எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செயல்படுவதை தான் இது காட்டுகிறது.

    எதிர்கட்சிகளுக்கு போதிய அவகாசம் எதையும் தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. தேர்தல் தேதியை அறிவித்த பிறகு தேர்தலை சந்தித்து தானே ஆக வேண்டும். நாங்கள் கூட்டாக தேர்தலை சந்திப்போம். அக்டோபர் 3-ந்தேதிக்குள் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்போம்.

    கடந்த சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி பணத்தை அள்ளிவிட்டது. எதிர்கட்சியாக இருக்கிற கட்சியும் அதே அளவில் பணத்தை அள்ளி விட்டது. ஆனால் நாங்கள் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் இருந்து தள்ளியே இருக்கிறோம். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அவமதித்துள்ளது. கர்நாடக சட்டசபையிலும், மேல்-அவையிலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இந்திய இறையண்மைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை மக்கள் நலக்கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. இதேபோல் கர்நாடக பா.ஜ.க. மத்திய மந்திரியையும் கண்டிக்கிறோம்.

    கோவையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன்முறையின் போது தங்கள் உடைமைகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். அங்கு அமைதி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வைகோவிடம் நிருபர்கள், ‘கடந்த தேர்தலில் உங்களுடன் இருந்த விஜயகாந்த், ஜி.கே.வாசன் உள்ளாட்சி தேர்தலிலும் உங்கள் அணிக்கு வருவார்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த வைகோ, ‘மக்கள் நலக்கூட்டணியில் 4 தலைவர்கள் தான் இருக்கிறார்கள்’ என்றார்.

    Next Story
    ×