search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு தமிழிசை வேண்டுகோள்
    X

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு தமிழிசை வேண்டுகோள்

    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க., இந்து முன்னணியினர் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    சசிகுமார் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் 28-ந்தேதி(நாளை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் இதுவரையில் அனுமதி அளிக்கவில்லை. எனினும் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

    தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், அதிகார பணம் இல்லாமல் நடைபெறும் என்பதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யாருக்கும் ஜனநாயக கடமை மறுக்க கூடாது.

    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக இருக்கிறது. நிச்சயமாக பா.ஜ.க. தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 4 நாட்களாக பா.ஜ.க.வில் விருப்ப மனு மாவட்ட வாரியாக பெறப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க. மைய குழு கூட்டம் நாளை(இன்று) நடக்கிறது. இதில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்கலாம். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதை அரசியல் கட்சிகளால் தடுக்க முடியாது.

    சு.திருநாவுக்கரசர் பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் பா.ஜ.க.வில் இருந்திருக்கிறார். பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    பேட்டியின்போது, நீங்கள் மேயர் பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, வேட்பாளர் பட்டியல் வரும் போது தெரியும்’ என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.
    Next Story
    ×