search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும்: தஞ்சையில் வைகோ பேட்டி
    X

    அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க வேண்டும்: தஞ்சையில் வைகோ பேட்டி

    பெரியாரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.
    தஞ்சாவூர்:

    பெரியாரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் அனுபவித்து வந்த காவிரி உரிமையை பிரித்து காவிரியில் புதிய அணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு தரக்கூடாது என்ற சதி செயல்களில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அணை பாதுகாப்பு மசோதாவை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும், நானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த மசோதா நிறைவேற்றபட்டால் பக்கத்து மாநிலங்களிலிருந்து தண்ணீர் பெற முடியாது.

    முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றியை பெற்றுள்ளது. ஒரு துரும்பு கூட கர்நாடகத்தினருக்காக வரவில்லை. வடநாட்டில் இவ்வளவு அமைதியான போராட்டம் இதற்கு முன்பு நடைபெறவில்லை. உச்சநீதிமன்றம் அமைத்த காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அப்போதைய காங்கரஸ் அரசும் அமைக்காமல் வந்தது இப்போதைய மோடி அரசும் அதனை தொடர்கிறது. காவிரி உரிமைக்காக எதிர்கால சந்ததியினர் பசியால் வாடக்கூடாது என்பதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விக்னேஷ் தீக்குளிப்பது என முடிவு செய்தார். தீக்குளித்த அவரது நெஞ்சில் பற்றிய தீ அவரை சாம்பலாக்கியது. ஆனால் தமிழ்ர்களின் நெஞ்சில் அது அணையா விளக்காகியது.

    காவிரிப் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு போன்ற பிரச்சினைகளை அந்தந்த மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன. இதற்கு மத்திய அரசும் துணை போனால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்.

    முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டினால் யாரும் எதிர்க்கப் போவதில்லை. உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மேகதாதுவில் அணைகட்ட கூடாது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என ஒரே முடிவாக எடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து கட்சி பிரதிநிதிகளை பிரதமரிடம் அழைத்து சென்று இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், நகரச்செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×