search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் துறைமுகம் அமைய தமிழக அரசு ஆதரவு அளிக்கும்: ஜெயலலிதா உறுதி
    X

    குளச்சல் துறைமுகம் அமைய தமிழக அரசு ஆதரவு அளிக்கும்: ஜெயலலிதா உறுதி

    குளச்சல் துறைமுகம் அமைய தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
    சென்னை:

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது குளச்சல் துறைமுகம் மேம்பாடு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான சர்வேயை தொடங்குவதற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம், பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    இனயம் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகத்துக்கான கட்டுமானம் நடக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி, இனயத்தை அந்த கட்டுமானம் பாதிக்காது என்று தெரிவித்தார். கடலில் இருந்து சீர்படுத்தப்பட்ட நிலத்தில்தான் அந்த துறைமுகம் கட்டப்படுமே தவிர, அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு வராது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து குளச்சல் துறைமுக திட்டம் அமலாவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார். ஆனால் மத்தியில் அடுத்தடுத்து அமைந்த அரசின் ஆதரவு கிடைக்காத நிலையில் அந்த திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

    மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது என்று குறிப்பிட்ட முதல்-அமைச்சர், அந்த திட்டத்துக்கு தேவையான அனைத்து ஆதரவும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதற்கு தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம், பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அந்த திட்டத்துக்கான முன்மொழிவு விரைவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

    மேலும் புதுச்சேரிக்கு தெற்கேயுள்ள கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரினார். இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைகள் என்று குறிக்கப்பட்ட சாலைகள் பராமரிப்புக்கான நிதி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் இருந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பாகமான தூத்துக்குடி- திருச்செந்தூர்- கன்னியாகுமரி இடையேயான சாலை மேம்பாடு மற்றும் முன்னேற்றப் பணிகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துக்கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

    புதுச்சேரிக்கு தெற்கே உள்ள கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலையாக எடுக்கப்படும் பட்சத்தில், அது சிறப்பாக பராமரிக்கப்படும் என்பதற்கு தேவையான முன்னுரிமையும், நிதியும் அளிக்கப்படும் என்பதற்கு மத்திய மந்திரி உறுதி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகளுக்கு முதல்-அமைச்சரின் ஆதரவு தொடர்ந்து தரப்படவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அவற்றுக்கு தமிழக அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×