search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1974-ம் ஆண்டு மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தியது: கருணாநிதி அறிக்கை
    X

    1974-ம் ஆண்டு மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தியது: கருணாநிதி அறிக்கை

    சாராய கடைகளை 1971-ம் ஆண்டு தி.மு.க. திறந்தாலும், 1974-ம் ஆண்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுவிலக்கு என்னால் தான் ரத்து செய்யப்பட்டது என்றும், 2007-ம் ஆண்டில் பேரவையில் நான் கூறிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டதோடு, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது அவருடைய தலைமையிலான அரசு தான் என்று தெரிவித்திருக்கிறார். 1971-ம் ஆண்டைப் பற்றியும், 2007-ம் ஆண்டைப் பற்றியும் நினைவுக் கூர்ந்த ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு 21-7-2015 அன்று “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று நான் அறிவித்தது எப்படித் தான் ஞாபகத்திற்கு வராமல் போயிற்றோ?

    1971-ல் தி.மு.க. அரசுகள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974-ல் தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது. இதையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பேசும்போது மறைத்துவிட்டார்.

    ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு.க. ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பது தான் உண்மை.

    1981-ல் அ.தி.மு.க. ஆட்சியில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மீண்டும் ‘கள்’, சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார். அதற்குப் பிறகு, 2001-ல் இன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். 2003-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மது விற்பனைக்காக “டாஸ்மாக்” நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது உண்மையா இல்லையா?

    மதுவிலக்கு கொள்கையை பொறுத்தவரையில், தி.மு.க. ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டதை போல சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல. 1937-ல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மது விலக்கை அமல்படுத்தினார். ஆனால் அதுவும் 1939-ல் முடிவுக்கு வந்தது. அந்த 1937-ம் ஆண்டிலே கூட, ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த போதே கூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும் தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. மற்ற மாவட்டங்களில் 1937-ம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது.

    1948-ல் ஓமந்தூரார் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இதுதவிர மற்ற காலங்களில் அதாவது 1937-க்கு முன்பும் சரி, 1939-க்கு பின்பு 1948-ம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969-ல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், “மதுவிலக்கு கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையைவிட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிக பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்” என்று தெரிவித்தார்.

    மதுவிலக்குப் பிரச்சினையிலே உண்மையான அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலேயே அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தால், ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலே இருந்த போது படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க மாட்டாரா?

    இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.
    Next Story
    ×