search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
    X

    தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    தர்மபுரி–கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தர்மபுரி:

    தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையெட்டி இன்று காலை முதலே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கினார்கள்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவை தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 5 சட்டசபை தொகுதி களாகும்.

    தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் இன்று காலை முதல் ஆண்கள், பெண்கள் திரளாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதியில் 8 லட்சத்து 91 ஆயிரத்து 226 ஆண் வாக்களர்களும் 5 லட்சத்து 68 ஆயிரத்து 622 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 103 வாக்காளர் களும் உள்ளனர். இங்கு மொத்தம் 1450 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தர்மபுரி அ.தி.மு.க. வேட்பாளர் பு.தா.இளங்கோவன் தனது சொந்த ஊரான புவனகிரி பகுதிக்கு வாக்களிக்க சென்றார். தி.மு.க.வேட்பாளர் தடங்கம் சுப்ரமணி தடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

    பா.ம.க.வேட்பாளர் செந்தில், தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் காந்தி நகர் விஜய் வித்யலா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.

    அரூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 305 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 339 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் இன்று காலை முதல் ஆர்வமுடன் வாக்களிக்க தொடங்கினர்.

    அரூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க.வேட்பாளர் முருகன் அரூர் அம்பேத்கர் நகர் பள்ளியில் வாக்களித்தார். தி.மு.க.வேட்பாளர் ராஜேந்திரன் வர்ணதீர்த்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோவிந்தசாமி தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்களித்தார். பா.ம.க.வேட்பாளர் முரளி, பா.ஜ.க.வேட்பாளர் வேடியப்பன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று காலையில் வாக்களித்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்ட சபை தொகுதியில் உள்ள நாகதாசம் பட்டி வாக்குச்சாவடி மையததில் காலை முதல் ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களிக்க தொடங்கினார்கள்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, தி.மு.க.வேட்பாளர் இன்பசேகரன், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பன், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    இதில் தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரன், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பன் ஆகியோர் தங்களது வாக்கைப்பதிவு செய்தனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பென்னாகரம் தொகுதியில் 283 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட சோளப்பாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் வேலை செய்யவில்லை. பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. கானாப்பட்டி மிஷின் பழுதடைந்து விட்டது. பின்னர் அந்த மிஷினும் சரி செய்யப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் உயர் கல்வி துறை அமைச்சருமான பி.பழனியப்பன் தனது குடும்பத்தினருடன் வந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்து கொண்டார். அவருடன் வந்திருந்த தயார் மற்றும் மனைவி ரோஜா, மகன் எழில் ஆகியோரும் வாக்களித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், பா.ம.க. வேட்பாளர் சத்திய மூர்த்தி, தே.மு.தி.க.வேட்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட வேட்பாளர் களும் சுயேட்சை வேட்பாளர் களும் ஓட்டு போட்டனர்.

    பாலக்கோடு தொகுதியில் மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகன் தனது சொந்த ஊரான காரிமங் கலத்தில் ஓட்டு போட்டார்.

    தி.மு.க. வேட்பாளர் முருகன் பாலக்கோடு அடுத்த ஏ.மல்லாபுரம் தொட்டப்பாவடி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    தே.மு.தி.க. காவேரிவர்மன், பா.ம.க. வேட்பாளர் மன்னன், ஐ.ஜே.கே. வேட்பாளர் நஞ்சப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கிருஷ்ணகிரி, ஊத்தங் கரை, பர்கூர், வேப்பன அள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 647 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 603 பேரும் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 20 பேரும், மற்றவர்கள் 24 பேரும் அடங்குவர். இந்த வாக்காளர்கள் இன்று காலையில் ஆர்வமுடன் வாக்களிக்க தொடங்கினர்.

    இந்த தொகுதியில் 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20 பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், அ.தி.மு.க.வேட்பாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அதே வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வேட்பாளர் மாலதி நாராயணசாமி ஓட்டு போட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கனியமுதன், பா.ம.க.வேட்பாளர், பா.ஜ.க.வேட்பாளர் உள்ளிட்ட வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

    ஊத்தங்ரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலையில் வாக்களிக்க தொடங்கியதும் 3 மிஷின்கள் பழுதடைந்து விட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி தொகுதி பொது தொகுதி யாகும். இந்த தொகுதியில் 1 லட்சத்து, 18 ஆயிரத்து 843, ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்களும், மற்ற வாக்காளர்கள் 7 பேரும் உள்ளனர்.

    இந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக 292 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 27 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அடங்கியது தான் தளி தொகுதி. இந்த தொகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலை 6 மணி முதலே வாக்குச்சாவடி மையங்களில் குவிய தொடங்கினார்கள்.

    நேரம் செல்ல செல்ல வாக்களர்களின் கூட்டம் வாக்குசாவடி மையங்களில் நிரம்பி வழிந்தன. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங் கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க தொடங்கினார்கள்.

    இந்த தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் சுயேட்சை வேட்பாளர் கள் 4 பேர் ஆவார்கள். இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதும் அ.தி.மு.க. வேட்பாளர் நாகேஷ் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். பா.ஜ.க.வேட்பாளர் பி.ராமச்சந்திரன் அதே வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    தி.மு.க.வேட்பாளர் ஒய்.பிரகாஷ் பெல கொண்டபள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் வேப்பன அள்ளி தொகுதிக்கு உட்பட்ட வரகனப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அதைப்போல் பா.ம.க. வேட்பாளர் அருண் ராஜன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொண்டனர்.

    ஓசூர் சட்டமன்ற தொகுதியில், 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று காலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குசாவடிக்கு சென்று, நீண்ட வரிசையில் நின்று, தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஓசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் பஸ்தி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில், தனது மனைவி ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியுடன், வாக்குப்பதிவு செய்தார்.

    இதேபோல், பா.ஜனதா கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரன், காமராஜ் காலனியில் உள்ள அரசு நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    வேப்பனபள்ளி அ.தி.முக.வேட்பாளர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், சூளகிரி அருகே அத்திமுகம் அரசு பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில், குடும்பத்துடன் வந்து வாக்க ளித்தார். வேப்பனபள்ளி தே.மு.தி.க. வேட்பளார் நாகராஜ், சூளகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    பர்கூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து கொண்டனர். இந்த தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேப்பனப்பள்ளி தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொண்டனர். இங்கு 299 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஓட்டுகளை போட்டனர். இங்கு மொத்தம் 299 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் தங்கமணி குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டார்.

    குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் யுவராஜ் பள்ளிப்பாளையம் ஒன்றியம் அலமேடு நடுநிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார்.

    ஆவாராங்காடு பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வந்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    கொல்லிமலையில் உள்ள வாக்குச்சாவடிகளில் மலைவாழ் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். சேந்தமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக காணப் பட்டது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பளியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் விட்டனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்றாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    தே.மு.திக.

    திருச்செங்கோடு தொகுதி தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணி வேட்பாளர் விஜய கமல் திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார்.

    Next Story
    ×