என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு காளி தேவிக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.

    கொல்கத்தா:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்றார். அங்கு காளி சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தார். அதன்பின், சாமியை தரையில் விழுந்து கும்பிட்டார்.

    அவருடன் மாநில கவர்னர் ஆனந்த போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.
    • பெங்களூருவில் உள்ள நிறுவனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர்.

    திங்கள்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் யாரிடமும் டிக்கெட்கள் இல்லை. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.

    சந்தேகமடைந்த ஆர்பிஎப் அதிகாரிகள், அந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதன்பின் நடந்த விரிவான விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரெயிலில் இருந்த அப்பெண்களை, பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர். வேலையில் அமர்த்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

    அப்பெண்கள் அனைவரும் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அனைத்து பெண்களும் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மொத்தம் 56 பெண்களை போலீசார் மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஆணும் , பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    • இரவு சாப்பாட்டை முடித்து விட்டு, அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை.

    மேற்கு வங்க மாநிலம் ஐஐடி கரக்பூரில் பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் 4ஆவது ஆண்டு படித்து வந்த ரிதம் மொண்டல் (வயது 21) என்ற மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 4ஆவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.

    விடுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் ஹாலில் அமைந்துள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். நேற்றிரவு உணவை முடித்துக் கொண்டு, அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நடத்தையில் எந்த அசாதாரணமும் தெரியவில்லை என விடுதியில் அவருடன் தங்கியுள்ள மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஐஐடி கேஜிபி அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், அவர் தங்கியிருந்த அறையில் கதவை தட்டினோம். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் வளாகத்திற்கு வெளியில் உள்ள அவுட்போஸ்ட் போலீசாரை அழைத்து வந்து, விடுதி காவலர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்றோம். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி 3ஆம் வருட எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மாணவர் ஷான் மாலிக் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 20ஆம் தேதி ஓசேன் இன்ஜினீயரிங் பிரிவில் கடைசி வருடம் படித்து வந்த அனிகெட் வால்கர் தற்கொலை செய்து கொண்டார். மே 4ஆம் தேதி பி-டெக் 3ஆம் வருட மாணவர் ஆசிப் கமர் விடுமுறை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது தொடர்பாக கவுன்சிலிங் பெற ஒவ்வொரு விடுதி அறையிலும் பார் கோடு (Bar Codes) அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த நேரம் ஆலோசனை தேவை என்றாலும் அதை பயன்படுத்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை.
    • வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகள் கூட பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை.

    தமிழ்நாட்டை போல மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

    இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்துள்ளார். துர்காபூரில் அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதில் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றார்.

    இதன்பின் துர்காபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும் திரிணாமுல் அரசையே அவர் கடுமையாக சாடினார்.

    மோடி பேசியதாவது, "முர்ஷிதாபாத் (கலவரம்) போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, காவல்துறையினர் பாரபட்சம் காட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

    திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை. திரிணாமுல் அகற்றப்பட வேண்டும். சிண்டிகேட் ஆட்சியைக் கண்டு முதலீட்டாளர்கள் தப்பி ஓடுகிறார்கள். திரிணாமுல் காலத்தில் தொடக்கக் கல்வி, உயர்கல்வி அனைத்தும் படுகுழியில் சென்று கொண்டிருக்கின்றன.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காளம் நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறும். இது எனது நம்பிக்கை. ஆனால் திரிணாமுல், வங்காளத்தில் தொழில்மயமாக மாற்ற அனுமதிக்கவில்லை. எனவே, திரிணாமுல் வங்காளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், "வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்போதும் கூட, திரிணாமுல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. அதன் பிறகு, மற்றொரு (சட்ட) கல்லூரியில் ஒரு பெண் சித்திரவதை செய்யப்பட்டார். அதில் திரிணாமுல் (பிரமுகர்கள்) ஈடுபட்டிருப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

    மேலும்"ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்தி வெளியானது.
    • இதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொல்கத்தா:

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படு வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரையும் மதிக்கிறோம். ஆனால் வங்காளிகள் அட்டூழியங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

    வங்காளிகளை யாரும் துன்புறுத்த அனுமதிக்க மாட்டோம். யாராவது வங்காள மொழி பேசினால், அவர்களை வங்காளதேச-ரோஹிங்கியாக்கள் என அழைக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

    வங்காளதேசிகள் வங்காளதேசத்தில் இருக்கிறார்கள். ரோஹிங்கியாக்கள் மியான்மரில் வாழ்கிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது?

    மேற்கு வங்காள குடிமக்கள் மட்டுமே. அவர்களிடம் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் உள்ளன. அவர்கள் மேற்கு வங்காளத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் திறமைகள் உள்ளன.

    மேற்கு வங்காளம் இந்தியாவில் இல்லையா? அது நாட்டின் ஒரு பகுதி இல்லையா? ஒரே ஒரு மொழி மட்டுமே பேசப்படும் பல மாநிலங்கள் உள்ளன. அந்த மக்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

    இந்தி பேசுபவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, முதலில் குரல் எழுப்பியவர்கள் நாங்கள்தான். இங்கு வாழும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் அல்லது ஊழியர்கள் என யாராக இருந்தாலும் சரி. அவர்கள் எங்களுடையவும் எங்கள் நாட்டின் ஒரு பகுதியினரும் என்பதால் நாங்கள் அவர்களை ஒருபோதும் தாக்கமாட்டோம். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம்.

    பீகாரில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தியே மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளனர்.

    பீகாரிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க உள்ளனர். மேற்கு வங்காளத்திலும் இதே முறையைப் பின்பற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களது முயற்சியை இன்ச் பை இன்சாக தடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.
    • சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மேண்ட் (IMM) வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் நேற்று புகார் அளித்ததை அடுத்து, ஹரிதேவ்பூர் போலீசார், இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

    மாணவி தனது புகாரில், மன ரீதியான பிரச்சனைக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி, ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றதும், அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியபோது, தான் விடுதிக்குள் இருப்பதையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்ததாகவும் கூறினார்.

    வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

    காவலில் உள்ள நபர் முக்கிய குற்றவாளியா என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஐஐஎம் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    • சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கைதான மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வழக்கில் மனோஜித் மிஸ்ரா, ப்ரோமித் முகர்ஜி, ஜெயித் அகமது, காவலாளி பினாகி பானர்ஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் முன்னாள் தலைவர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவருக்கு இப்போது கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 31 வயதான அவர் பெண்களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எந்த பெண்களை பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என பலமுறை தொல்லை கொடுத்து சைக்கோ போல நடந்து வந்துள்ளார்.

    மேலும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களுக்கு பரப்பும் கொடூர மனம் படைத்தவராக இருந்துள்ளார். பெண்களை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது, தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசமான நடத்தைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மனோஜித் மிஸ்ராவின் முன்னாள் நண்பராக இருந்த டைட்டாஸ் என்பவர் கூறுகையில், 2013-ம் ஆண்டு மனோஜித் ஒரு கேட்டரிங் தொழிலாளியின் விரலை வெட்டினார். இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கிற்கு பிறகு அமைதியாக காணப்பட்ட அவர் 2016-ம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் மாணவர் பிரிவில் சேர முயன்ற போது அவரது குற்ற பின்னணி காரணமாக கட்சி தலைவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

    பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பரில் மனோஜித் மிஸ்ரா 40 ஆதரவாளர்கள் கொண்ட ஒரு கும்பலுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்து மாணவர்கள் சங்க உறுப்பினர்களை தாக்கி பணம் பறித்தார் என கூறப்படுகிறது.

    இதுபோன்று மனோஜித் மிஸ்ரா பற்றி அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை 2 பேர் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரிக்குள் இழுத்து செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்!
    • ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்!

    கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த சமீபத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    ஜூன் 25 அன்று 24 வயது சட்ட மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

    "ஒரு சில ஆண்கள் இந்த வகையான குற்றங்களைச் செய்கிறார்கள்.. ஆனால் ஒரு நண்பன் தன் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பணியில் இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும், கட்சிக்கு எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறி, திருணாமுல் காங்கிரஸ் கட்சி உடனடியாக தனது சமூக ஊடகப் பதிவில் விளக்கம் அளித்தது.

    இந்த சூழலில் கல்யாண் பானர்ஜியின் கருத்துக்களை மஹுவா மொய்த்ரா கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆணாதிக்கம் கட்சிகளைக் கடந்து பரவி வருகிறது.

    யாராக இருந்தாலும் இந்த அருவருப்பான கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது" என்று பதிவிட்டார்.

    மஹுவா மொய்த்ராவின் இந்தக் கண்டனத்திற்குப் பிறகு, கல்யாண் பானர்ஜி அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கினார்.

    "மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்! அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார் - ஆனால் அவர் யார்? அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது மனிதரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், "ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்! அவர் மிகவும் பெண்களுக்கு எதிரானவர்.

    அவர் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த வார்த்தை போர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    • தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர்.

    இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

    பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

    புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல் அப்பெண்ணை ஆசிரம பள்ளி ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

    அதை அப்பெண் எதிர்த்தபோதும் மருத்துவர் மற்றும் ஆசிரம ஊழியரகள் முன்னிலையில் அவரை மிரட்டடி அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதுபோல முர்ஷிதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் வெவ்வேறு கிளைகளுக்கும் அவரை அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு செய்து வந்துள்ளார். தான் மனரீதியாக உடைந்த நிலையில் இருந்து வந்தேன் என்று அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    கடைசியாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி அப்பெண் சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரை ஜூன் 13 இரவு பெராபூர் என்ற இடத்துக்கு வரச்சொல்லியுள்ளார்.

    அங்கு சென்ற தன்னை 2 நபர்கள் அணுகி, மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர் என்று அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது எல்லாம் தன்மீதான அவதூறு என பிரதிபானந்தா மறுத்துள்ளார். 

    • சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி கூறியதாவது:-

    சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு நான் வக்கீல் அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சில ஆண்கள் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்கிறார்கள்... ஆனால் ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்?. பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா?. இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை யார் பாதுகாப்பார்கள்?.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கல்லூரிக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதி கேட்டு நாழு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம், மேற்கு வங்களத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது காட்டுகிறது என அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தான் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சுகந்தா மஜும்தார் கூறியதாவது:-

    ஆர்.ஜி. கெர் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு வருடம் ஆகியது. அதற்குள் தற்போது சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.

    போலீஸ் துறை முதலமைச்சர் கைவசம் இருந்தும் கூட, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவை சந்தித்துள்ளது. மம்தா பானர்ஜி முதல்வர் நாற்காலியில் அமர உரிமை இல்லை. அவர் தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    மேலும், இடைத்தேர்தலில் பெற்ற மம்தா கட்சியினர் கொண்டாடியபோது வெடிவிபத்து ஏற்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ×