என் மலர்
இந்தியா

கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - முக்கிய குற்றவாளி மீது பல பாலியல் புகார்கள்
- சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கைதான மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் மனோஜித் மிஸ்ரா, ப்ரோமித் முகர்ஜி, ஜெயித் அகமது, காவலாளி பினாகி பானர்ஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் முன்னாள் தலைவர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவருக்கு இப்போது கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 31 வயதான அவர் பெண்களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எந்த பெண்களை பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என பலமுறை தொல்லை கொடுத்து சைக்கோ போல நடந்து வந்துள்ளார்.
மேலும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களுக்கு பரப்பும் கொடூர மனம் படைத்தவராக இருந்துள்ளார். பெண்களை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது, தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசமான நடத்தைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மனோஜித் மிஸ்ராவின் முன்னாள் நண்பராக இருந்த டைட்டாஸ் என்பவர் கூறுகையில், 2013-ம் ஆண்டு மனோஜித் ஒரு கேட்டரிங் தொழிலாளியின் விரலை வெட்டினார். இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கு பிறகு அமைதியாக காணப்பட்ட அவர் 2016-ம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் மாணவர் பிரிவில் சேர முயன்ற போது அவரது குற்ற பின்னணி காரணமாக கட்சி தலைவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பரில் மனோஜித் மிஸ்ரா 40 ஆதரவாளர்கள் கொண்ட ஒரு கும்பலுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்து மாணவர்கள் சங்க உறுப்பினர்களை தாக்கி பணம் பறித்தார் என கூறப்படுகிறது.
இதுபோன்று மனோஜித் மிஸ்ரா பற்றி அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை 2 பேர் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரிக்குள் இழுத்து செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






