என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வரும் அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    நாளை (26-ந்தேதி) காலை கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்தவாறே ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகங்களையும் அவர் காணொலி மூலம் திறந்துவைக்க உள்ளார்.

    பின்னர் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் 1000 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா கோவை வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை வரும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
    • தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். 'இந்தி படிக்காதே!" என்று யாரையும் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை.

    அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டும் தொடரும். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு.

    ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக கடைபிடித்து வருகிறது தமிழ்நாடு. தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. நேற்று தங்கம் விலை சற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    • பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.
    • துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற ஆணவச் செருக்குடைய பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    "கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ்முறைகள் என்றாக வேண்டும்" என்கிறார் போறிஞர் அண்ணா. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும். இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுநான் போறிஞர் அண்ணாவின் பார்வை.

    பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய புரட்சித் தலைவி அம்மாவிற்கு என்றென்றும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. அம்மா அவர்களே கூறியிருக்கிறார். "அரசியல் வாலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்துவிட்டு, அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம்," என்று என்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டுப் பேசியவர் புரட்சித் தலைவி அம்மா.

    மேலும் "மிகச் சிறிய பொறுப்புகளில், சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்கி உள்ளார்கள். பின்னர் அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு, இயக்கத்தின்பால் அவர்களுக்குள்ள விசுவாசம், தலைமையிடம் அவர்கள் கொண்டுள்ள பற்று, இவற்றின் காரணமாக அவர்கள் படிப்படியாக உயர்ந்துள்ளார்கள்." என்று அம்மா கூறியிருக்கிறார்கள். அம்மாவின் வாக்கு தெய்வ வாக்கு இதனை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

    ஒரு விதை வளருகிறது என்ற சொன்னால். அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல், அந்த மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற ஆணவச் செருக்குடைய பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சி என்பது நிச்சயம்.

    "எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை" என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அழியிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று.

    "பொறுத்தார் பூமியாள்வார்" என்று சொல்வார்கள். எனவே, 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் வீழும். நய வஞ்சகம் நசுக்கப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருவாடு மீனாகாது. கறந்த பால்மடி புகாது. நய வஞ்சகம் வெற்றி பெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.
    • பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.

    நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.

    நா.த.க. சார்பில் பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * பெரியார் குறித்த விமர்சனம் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எட்டும்.

    * நா.த.க. கொள்கைக்கு எதிராக முன்னுக்குப்பின் முரணாக சீமான் பேசுகிறார்.

    * பெரியாரை தமிழ் தேசியத்துக்கு எதிராக சீமான் முன்னிறுத்துவது பேராபத்து.

    * நா.த.க.வை வீழ்ச்சி பாதையை நோக்கி இழுத்து செல்கிறார் சீமான்.

    * பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.

    சீமானின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஏற்க முடியாததால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ள நிலையில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    • அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ளனர்.
    • கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்.

    கல்விச் சுற்றுலாவிற்காக மாணவர்களை மலேசியா அழைத்துச் சென்றபோது விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்ததாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் பதிவிவிட்டுள்ளார். அதில்,

    நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8-வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார்.

    "தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
    • அம்மன் அர்ஜுனன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது.
    • சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் சிவஞானன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கோவை வெள்ளியங்கிரி பகுதியில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான விதிமீறல்கள் உள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடைபெறும் இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி வனப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள 45 'டெசிபல்' ஒலி அளவைவிட மகாசிவராத்திரி விழாவின்போது வனப்பகுதியில் கூடுதல் ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கானோர் கூடுவதால் கழிவுநீர் தேங்கி விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே வனப்பகுதியில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர், 'சிவராத்திரி நிகழ்வின்போது மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ''ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. குறி்ப்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த பகுதியில் மாசற்ற சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

    அதற்கு மனுதாரர் தரப்பில், ''விதிகளை மீறி விடிய, விடிய ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலி மாசு இல்லையா? ஈஷாவில் 3 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. மகா சிவராத்திரி விழாவுக்கு 7 லட்சம் பேர் வருவார்கள். அவர்களுக்கு இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானது கிடையாது'' என்று வாதிடப்பட்டது. அதற்கு ஈஷா தரப்பில், 'ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில்தான் இந்த சிவராத்திரி விழா நடைபெறுகிறது. சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்'' என்று கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்புக்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவி்க்கப்பட்டு உள்ளதால், மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி 

    • மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணி அளவில் கூடுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    • தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது.
    • காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.

    புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது.
    • தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    சென்னை:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தி.மு.க. தனது 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 44 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இரண்டே கால் லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கும் அளவுக்கு கடனை அதிகரித்துள்ள அரசு தி.மு.க. அரசு. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    ஆசிரியர் நியமனம், மருத்துவர்கள் நியமனம், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல், அகவிலைப்படி அளித்தல் என எதைக் கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்லி காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசு, தற்போது மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படுவதை தாமதப்படுத்தி வருகிறது.

    2024-2025ம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பத்துடன் 30,000 ரூபாய் வைப்புத் தொகையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்தியுள்ளதாகவும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டியதாகவும், வழக்கமாக கவுன்சிலிங் முடிந்து ஓரிரு மாதங்களில் தொடர்புடையவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஐந்தாறு மாதங்களாகியும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படவில்லை என்றும், இந்தத் தொகையை கல்லூரிக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதிப் பற்றாக்குறை காரணமாக வைப்புத் தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனியார் கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, வைப்புத் தொகையை திருப்பித் தர தாமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. இது, தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, வைப்புத் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
    • அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.

    மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும். போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம். அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×