என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல் கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு
- பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான் இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
இவ்வாறு அண்ணாலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
- காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம்.
அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.
குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
- 50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.
சென்னை:
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க) பேசினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.
செல்லூர் ராஜூ-அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
செல்லூர்ராஜூ- கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதி தான் செலவு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமி- நீங்கள் பசுமை வீடு திட்டம் அறிவித்து இருந்தீர்கள், அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. நீங்கள் அறிவித்ததை நாங்கள் கட்டி வருகிறோம்.
எடுத்த உடனே எந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செல்லூர் ராஜூ- பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.
50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிறைய பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளது.
செல்லூர் ராஜூ- நாங்கள் 2016-ல் தனித்து நின்று வென்றோம்.
அமைச்சர் எ.வ.வேலு- இனி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.
செல்லூர் ராஜூ- தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டது என விளக்கப்படவில்லை.
அமைச்சர் சிவசங்கர்- சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பஸ்கள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மினி பஸ்களுக்கான அனுமதி தொடர்பாக வழித்தடங்கள் வழங்கப்பட்டு விட்டது. மே மாதம் முதல் வாரத்தில் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
செல்லூர் ராஜூ- 4 ஆண்டுகள் ஆகி விட்டது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. சரண்டர் விடுப்பு அறிவிப்பை இந்த ஆண்டு அறிவித்து இருக்கிறீர்கள். இது அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வர வேண்டியது
அமைச்சர் தங்கம் தென்னரசு- கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளை நீங்கள் தான் நிறுத்துனீர்கள். இப்போது ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறீர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சிறையில் அடைத்தது யார்? ஆட்சியில் என்பது மனசாட்சி இருந்தால் தெரியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- 24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
- தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.
முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.
தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.
- கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
- ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
உறுப்பினர் குறிப்பிட்டு உள்ள கோவிலுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி பாலாபிஷேகம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டு தோறும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி 2022- 2023-ம் ஆண்டில் ரூ.100 கோடியும் 2023-2024-ம் ஆண்டில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர உபயதாரர் நிதியாக ரூ.60 கோடியும் திருக்கோவில்கள் சார்பாக ரூ.70 கோடியும் கிடைக்கப் பெற்று மொத்தம் ரூ.430 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் 100 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. சுவாமிமலையில் மின் தூக்கி சீரமைக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் உறுப்பினர் ஜவாஹிருல்லா உடன் நானும் பங்கேற்க உள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
- சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை.
- திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநிலை தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
ஒரு ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என கூறியுள்ளார்.
- பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.
- சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமான செங்கோட்டையனுக்கு கடைசி வரை வாய்ப்பு தரப்படவில்லை.
3, 4 முறை கையை உயர்த்தியும் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
செங்கோட்டையனை பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
- சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.
- இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தெலுங்கானாவில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூக நீதிப் புரட்சி தான்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






