என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும்.
    • பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:-

    தக்காளி காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.

    இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும். எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • பனியன் நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று இரவு பணி முடிந்து நிறுவனத்தை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து குடோனை பூட்டி விட்டு அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அதிகாலையில் குடோனுக்குள் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    குடோன் முழுவதும் பனியன் கழிவு துணிகள் இருந்ததால், அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கோபி, கொடிவேரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    கோபி கரட்டடிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், கோபிபாளையம், பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம், மொடச்சூர், வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், பொலவ காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதை தொடர்ந்து விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மின் தடையும் ஏற்பட்டு அதிகாலை 3 மணி அளவில் மின் தடை நீங்கியது.

    இந்த நிலையில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி கொடிவேரி அணையில் 948 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதன் காரணமாக தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து கொடிவேரி அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் பலர் கொடிவேரி அணைக்கு வந்து இருந்தனர். அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    • சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், காட்டூர், காட்டூர் புதூர், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கக்கூடிய விவசாய விளை பொருட்களான தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், காலி பிளவர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையால் தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாமல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அதனை எடுத்துச்செல்ல முடியாமல் பூசணிக்காய் ,தக்காளி, கீரைகளை சாலையில் வீசிச்சென்றனர். சிலர் சாலையில் தங்களது விளை பொருட்களை வைத்து விற்பனை செய்தனர்.

    தெற்கு உழவர் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் சரியான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு தேங்கக்கூடிய மழை நீரை வெளியேற்றக்கூடிய வடிகால் வசதியை ஏற்படுத்தாததால் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறி விடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தேங்கி கிடந்த மழைநீரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றனர். 

    • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் சொற்ப அளவியிலேயே விழுந்து வந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    • பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
    • ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.

    பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடந்து செல்ல முடியாத நிலையும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளக்கவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.

    நேற்று மாலை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீரின் அளவை பொறுத்து சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்தார்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மேலும் சில நாட்கள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடியாக உள்ளது. நீர்வரத்து 180 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது. வரத்து 396 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1442 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடி. வரத்து 155 கன அடி. திறப்பு 3 கன அடி, இருப்பு 40.28 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.40 அடி. வரத்து 7 கன அடி.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 30.2, வீரபாண்டி 9.4, பெரியகுளம் 61, மஞ்சளாறு 43, சோத்துப்பாறை 86, வைகை அணை 22.8, போடி 12.8, உத்தமபாளையம் 54.6, கூடலூர் 9.6, பெரியாறு அணை 8, தேக்கடி 1.2, சண்முகாநதி அணை 11.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!
    • ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!

    2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!

    அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.

    அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.

    ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் திணறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன்படி நேற்று முன் தினம் சுமார் அரை மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கன மழையாக கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சாலையோரம் தேங்கி நின்றது.

    இடியுடன் கூடிய கன மழையால் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோபி அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. அதன் அருகே கசிவு நீர் குட்டையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 15 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து கோபி தாசில்தார் சரவணன், நீர்வளத் துறை அதிகாரிகள், பொது பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் வடிந்தது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதே போல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    அப்போது அந்தியூர் கருவாச்சி அடுத்த பால பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இடி தாக்கியது. இதில் கோவிலில் லேசான சேதாரம் ஏற்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எலந்தை குட்டை மேடு, கவுந்தப்பாடி பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் நம்பியூர் அம்மாபேட்டை, கொடி வேரி, மாவட்ட அணை பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதைப்போல் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வரு மாறு:- கோபி-155, எலந்த குட்டைமேடு-100.40, கவுந்தப்பாடி-91.40, நம்பியூர்-79, கொடிவேரி-52.20, வரட்டு பள்ளம்-51.20, பவானி சாகர்-39.40, சென்னிமலை -39, குண்டேரி பள்ளம்-29.40, சத்தியமங்கலம்-23, பவானி-19, தாளவாடி-15, ஈரோடு-12.30, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-2.

    • விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்
    • ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயிருப்பதாவது:-

    தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ், அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் 2025-26-ம் ஆண்டு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்தநிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது.

    கனமழையின் காரணமாக பீச்ரோடு, இருளப்பபுரம், வைத்தியநாதபுரம், வடலிவிளை, புன்னைநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர்.

    கோழிப்போர்விளை பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 195 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, களியல், குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30 அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 125.4, பெருஞ்சாணி 37.6, சிற்றாறு 1-60.2, சிற்றாறு 2-56.6, கொட்டாரம் 2.2, மயிலாடி 1.2, நாகர்கோவில் 44.6, கன்னிமார் 7.6, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 18, பாலமோர் 38.2, தக்கலை 49, குளச்சல் 14, இரணியல் 74, அடையாமடை 128.4, குருந்தன்கோடு 23, கோழிப்போர்விளை-195, மாம்பழத்துறையாறு 57, ஆணைக்கிடங்கு 55.6, களியல் 46.4, குழித்துறை 32.4, சுருளோடு 61.4, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 16.6.

    • மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது.

    பின்னர் இரவு 10 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை இன்று அதிகாலை 4 மணி வரை இடைவிடாமல் பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இந்த மழை நீடித்தது. குறிப்பாக திருப்பூர் மாநகர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் அலுவலக முகாம் பகுதியில் 15 செ.மீ., வரை மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    திருப்பூர் அறிவொளி நகர் பகுதி முழுவதுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெண்கள் குழந்தைகள் என ஏராளமான மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக அந்த பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பேக்கிங் அட்டைகள் டெலிவரிக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீர் உள்ளே புகுந்ததால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டைகள் தண்ணீரால் சேதமடைந்துள்ளது. அதே நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அட்டைகளை ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ தண்ணீரில் மூழ்கி என்ஜினில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மழை நீரால் சேதம் அடைந்துள்ளது. இதேபோல் இப்பகுதியில் பல வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சாமுண்டிபுரம், அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் திருப்பூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.



    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-110, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-150, திருப்பூர் தெற்கு-96, கலெக்டர் அலுவலகம்-131, அவினாசி-75, ஊத்து க்குளி-120, பல்லடம்-28, திருமூர்த்தி அணை-25. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது.

    திருப்பூர் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம் பாளையம் என்.எஸ். செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஊத்துக்குளி அடுத்த ஆதியூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் திருவாய் முதலியூர் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

    ×