என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல் படியைக் குறிக்கிறது.
- கூட்டாட்சி மற்றும் மக்களின் விருப்பத்திற்கான நமது தொடர்ச்சியான போராட்டத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர். இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்க பதிவில் "தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக மதிப்பை வரலாற்று ரீதியாக மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. கடுமையான காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. மேலும் மக்களின் விருப்பத்தை தடுக்க ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான கேரளாவின் நிலைப்பாடு மற்றும் நடந்து வரும் சட்டப்போராட்டத்தின் ஒரு உறுதியான நிரூபணம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் நாம் விவாதித்தது போல, இந்தத் தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல் படியைக் குறிக்கிறது. ஆனால் இது வெறும் ஆரம்பம்தான். கூட்டாட்சி மற்றும் மக்களின் விருப்பத்திற்கான நமது தொடர்ச்சியான போராட்டத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்தார்.
- என் தந்தை நலமுடன் உள்ளார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என் தந்தை நலமுடன் உள்ளார், மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
- தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் முன்னோடி மாநிலம்.
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார்.
இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது.
இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது.
மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.
தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று.
மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது.
- நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்று கூறி வந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
- சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது.
- ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் தரப்பு வாதம்.
அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது. ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
- இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
- பெண்களுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. எரிவாயு சிலிண்டர் குறையும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், விலை குறையவே இல்லை.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டுதான் போகிறது. அதனால் இன்றைக்கு இல்லத்தரசிகள் மிகவும் சிறமப்படக்கூடிய நிலைமையிலும், தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது அவர்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை பரிசீலனை செய்து பெண்களினுடைய கஷ்டத்தை உணர்ந்து, சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக ஆட்சியில் 2.46 கோடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இருந்த நிலையில், போலியான உறுப்பினர்களை நீக்கியுள்ளோம்.
- உறுப்பினர் பட்டியல் சீரமைக்கப்பட்ட பிறகு 1.59 கோடி நபர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் 2.46 கோடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இருந்த நிலையில், போலியான உறுப்பினர்களை நீக்கியுள்ளோம். உறுப்பினர் பட்டியல் சீரமைக்கப்பட்ட பிறகு 1.59 கோடி நபர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
- தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக கூட்டத்தை கூட்டியுள்ளார்.
- கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம்.
நீட் தேர்வு விவகாரம்: அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது- இபிஎஸ்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2026-ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக 9.4.2025 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அதிமுக, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை:
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.
இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை விட்டு புறப்பட்டு போகவேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
- முதலமைச்சரின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.
இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
முதலமைச்சரின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
- விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே?
- விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.
மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள விஜயை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். விஜய் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேச மாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.
விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.
பண மதிப்பிழப்பு (Demonetization) மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி திரைத்துறையில் பிளாக் (Black) டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா நீங்கள்? சினிாமாவில் Black-ல் டிக்கெட் விற்றீர்கள். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள். உள்ளே பாப்கார்கனை கூட உயர்த்திதான் விற்றீர்கள்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
- தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான்.
- மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
திருச்சி:
திருச்சி நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வந்த போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை.
அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல் துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு.
நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது. நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆள் மாற்றத்திற்கான அரசியலில் நான் இல்லை.
அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன். ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான்.
நான் கூட்டணி வைக்கப்போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்போடுதான் என சிரித்தவாறு கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது.
தேர்தல் நடக்கும் போது நடைபெறும் திருவிழா போன்றது. அமலாக்கத்துறை வருமானவரித்துறை என வருவார்கள்.
சட்டமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை.
தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான். இதனால் எங்கள் கட்சியின் செயல்பாடு வேகம் குறையாது. கோலி குண்டு விளையாடியது கோர்ட்டு வாசலில்தான். நீதிபதி மன்றங்களும், ஜெயில்களும் கட்டப்பட்டதே எங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.






