என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விஜய் அறிக்கை: ஒன்றும் தெரியாமல் பேச வேண்டாம் என தமிழிசை விமர்சனம்
- விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே?
- விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.
மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள விஜயை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். விஜய் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?. பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேச மாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம்.
விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ, பொருளாதாரமோ தெரியாது.
பண மதிப்பிழப்பு (Demonetization) மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி திரைத்துறையில் பிளாக் (Black) டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? அதை கட்டுப்படுத்தினீர்களா நீங்கள்? சினிாமாவில் Black-ல் டிக்கெட் விற்றீர்கள். சினிமா டிக்கெட் விலையை உயர்த்தினீர்கள். உள்ளே பாப்கார்கனை கூட உயர்த்திதான் விற்றீர்கள்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.






