என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர்.
    • தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    இலக்கியச் செல்வர்

    குமரி அனந்தன் (93) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணி நடத்திய "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு" ஆதரவு தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அத்துடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பாராட்டினார்.

    "இவர்கள் சிறுத்துப் போவார்கள் என்றெண்ணி ஆதிக்க சக்திகள் இவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்; ஆனால், இவர்களோ சிறுத்துப் போகவில்லை; மாறாக, சிறுத்தையானார்கள்" -என்று எம்மை ஊக்கப்படுத்தியவர். தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர்.

    அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி- காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இலக்கியச்செல்வருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்.
    • தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட குமரிஅனந்தன் மறைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, தன் தமிழால், பேச்சாற்றலால் இளைஞர்களிடம் தேசப்பக்தியை விதைத்தவர். தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

    குமரிஅனந்தன் அவர்களின் மறைவால் வாடும் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர், பாஜக மூத்த தலைவர் அக்கா டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ஓம் சாந்தி...

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மிகச் சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
    • குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

    பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மறைந்த குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன்.
    • தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான குமரிஅனந்தன் மறைவு செய்தி அறிந்து துயருற்றேன்.

    பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணி செய்த பெருவாழ்வை போற்றி தமிழக அரசு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டது.

    ஏராளமான நூல்கள், எண்ணற்ற மேடைகளை கண்ட குமரி அனந்தன் தமிழால் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்.

    குமரிஅனந்தன் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை உள்ளிட்ட குடும்பத்தினர், காங்கிரஸ் தொண்டர்கள், சொந்தங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். 

    • குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
    • பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

    தலைசிறந்த தேசியவாதியான ஐயா குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள்.
    • தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93) நேற்று இரவு 12.15 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் தேசியத்தையும் காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்ட எனது தந்தை குமரி அனந்தன் அவர்கள் 12.30 மணிக்கு தனது கடைசி மூச்சை தமிழ் மண்ணில் விட்டார்கள்.

    அவர்களை பொறுத்தமட்டில் அரசியலில் நேர்மையான அரசியல், துணிச்சலான அரசியல், கொள்கை பிடிப்புள்ள அரசியல், காமராஜரின் தொண்டன் என்பதுதான் எனது மிகப்பெரிய அடையாளம் என்று எப்போதுமே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள். உள்ளாடைகள் கூட கதரில்தான் அணிவார்கள். அப்படி கொள்கைகளில் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட என் தந்தை 4 முறை தமிழகத்தில் சட்டமன்றத்தையும் ஒரு முறை பாராளுமன்றத்தையும் அலங்கரித்து இருக்கிறார்கள். 

    மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆட்சி செய்யும்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்முதலில் தமிழில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டவர். முதல்முதலில் தமிழை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்தவர். 8 முறை பாத யாத்திரை செய்து இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். தமிழ்... தமிழ்... தமிழ்... என்பது மிகவும் அவர்களின் உயிர் மூச்சு.

    தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர். மிகச்சிறந்த பேச்சாளர். அன்பிற் சிறந்தீர் என்று தான் ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும்போதே அதிகமான கைத்தட்டல்களை பெறுவார்.

    என் தந்தை சிறுவயது முதல் அவரை பார்த்து வளர்ந்தவள் நான். நான் வேறு இயக்கத்தை தேர்ந்தெடுத்தபோது சற்று கோபமாக இருந்தாலும் பின்பு எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னை வாழ்த்தியவர். என்னை உயரத்தில் பார்த்து மகிழ்ந்தவர். இறுதி காலத்தில் இயற்கையோடு இருக்கவேண்டும் என்பதற்காக எங்களோடு தான் இருந்தார். கடைசி காலம் வரை எங்களோடு தான் இருந்தார்.

    அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் அவரை 93 வயது பிறந்தநாளையும் கொண்டாடினோம். அவருக்கு இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு ஊர்வலம் கிளம்பி விருகம்பாக்கம் இடுகாட்டில் நிறைவு செய்கிறோம்.

    நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். கடைசி காலத்தில் கூட தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை சொல்லுங்கள் என்று எங்களுக்கு அறிவுரை சொல்லி எங்களை வளர்த்திருக்கிறார்.

    தந்தை என்று இருந்ததை விட நாட்டுக்கு ஒரு தொண்டன் என்ற வகையிலேயே அவருடைய வாழ்க்கை இருந்து இருக்கிறது.

    உங்கள் அனைவரின் சார்பிலும் உங்கள் சகோதரியாக அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ஒரு நல்ல மனிதர், நேர்மையான மனிதர், அரசியலுக்காக எந்த வகையிலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர், நேர்மையை விட்டுக்கொடுக்காதவர், உழைப்பாளி, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர், 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரைக்கும் வாழ்க்கையை நேரடியாக நேர்மறையாக நடத்தக்கூடியவர். படிப்பாளி. அந்த காலத்திலேயே 2 எம்.ஏ., படித்து இருக்கிறார்.

    புத்தகங்கள் தான் அவருடைய வாழ்க்கை. அப்படிப்பட்ட அப்பாவை இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறேன். போய் வாருங்கள் அப்பா. அடிக்கடி நான் சொல்வதுண்டு மருத்துவம் தானே படித்து இருக்கிறீர்கள். தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் என்று கேட்கும்போது, தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதனால் நான் தமிழ் பேசுவேன் என்று பெருமையாக என்னை பேச வைத்தவர்.

    நேரடியாக என் அப்பா எனக்கு எதுவும் சொல்லிக்கொடுத்ததில்லை. ஆனால் அவருடைய ஒழுக்கத்தையும், நேர்மையையும் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான். தேசமும் தெய்வீகமும் எனது 2 கண்கள் என்று சொல்லி வளர்த்தவர். அதனால் தான் இன்றும் நான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் 2 கண்களாக போற்றிக்கொண்டு இருக்கிறோம். தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளவர். அவரை இழந்து வாடுகிறோம். ஆனால் துணிச்சலாக இருக்க வேண்டும். தமிழ் பேச வேண்டும். நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும், எதற்கும் தலைகுனிய கூடாது என்ற அவருடைய வாழ்க்கையை பின்பற்றி, அவர் என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் நினைத்தாரோ அவர் வழியையொட்டி அதை நாங்கள் செய்து முடிப்போம். உங்கள் சகோதரியாக செய்து முடிப்பேன்.

    தந்தையை இழந்து வாடும் இந்த நேரத்தில் வந்து ஆறுதலை தந்த உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்துசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
    • இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை.

    சென்னை:

    சட்டசபையில் கடந்த 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 'நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும். மேலும், இதுதொடர்பாக அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று அறிவித்தார்.

    அதன்படி சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.

    இதற்கிடையே 'நீட்' விலக்கு குறித்து தமிழக அரசு கூட்டியுள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2026-ல் தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்துசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக சட்டமன்றக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, தி.மு.க. அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது' என்று கூறியுள்ளார்.

    • சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும்.
    • அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி சமீபத்தில், 'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    அந்த அறிக்கை தொடர்பாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, 'வேலைவெட்டி இல்லாமல், எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த சைதை துரைசாமி கருத்துகளை கூறி வருகிறார்' என்று கடுமையாக பேசி இருந்தார்.

    அவருடைய இந்த பேச்சுக்கு சைதை துரைசாமி பதில் அளிக்கும் வகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் முதலில் தன்னை பற்றி எம்.ஜி.ஆர். பேசிய வீடியோவை காண்பித்தார்.

    எம்.ஜி.ஆர். அந்த வீடியோவில், "சைதாப்பேட்டை என்றாலே எனக்கு எலுமிச்சை பழம்தான் நினைவுக்கு வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட சைதை துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சியே ஞாபகம் வரும். நான் ஒரு அரசியல்வாதி. என் அரசியல் கட்சியில் இருந்த சைதை துரைசாமி அப்போதிருந்த முதலமைச்சருக்கு இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம்பழ மாலையை போட்டார். ஆனால் அந்த மேடையிலேயே அடித்து தூளாக ஆக்கி சைதை துரைசாமியை தூக்கி கொண்டுபோய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம்தான் என் கண்முன்னே நிற்கும்'' என பேசியிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை பற்றி பேசிய வீடியோவை காண்பித்தார். அதில், 'மனிதாபிமானத்தின் மணிமகுடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும் சிறந்த மக்கள் நலத் தொண்டனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி உருவாக்கி இருக்கும் அறக்கட்டளையையும், அதன் கீழ் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தின் சிறப்பையும் பார்க்கும்போது, சாதி, பேதம் பாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் சிறந்த பணிகளை ஆற்ற பிறந்தவர்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புகள்தான் என்பது உறுதிப்படுகிறது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் ஒரு சீரிய பணி இது. கிஞ்சித்தும் லாப நோக்கம் இல்லாமல், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனப்பாங்கோடு இந்த இலவச திருமண மண்டபத்தை உருவாக்கியிருக்கும் சைதை துரைசாமியை மனம் மாற பாராட்டுகிறேன். ஆகவே இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், நிச்சயமாக எனக்கு சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை உண்டு' என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோக்களை காண்பித்த பிறகு சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்னுடைய தியாகம், நேர்மை, அறம் சார்ந்த வாழ்வு, சேவை நிறைந்த செயலை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் என்னை வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்லி இருக்கிறார். சேவை பற்றி உணராத இப்படிப்பட்ட மனிதர்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறார்கள் என நினைத்து அவர்களை பொதுமக்கள் மத்தியில் தோலுரிக்கத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    அ.தி.மு.க. நல்ல முறையில் இருக்க வேண்டும். வெற்றி பாதையில் செல்ல வேண்டும். கருத்துகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன், முதல் தியாகி என்னை பார்த்து வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்வதா?.

    2021-ல் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது போல, பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் 26 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 2 மத்திய மந்திரிகள் கிடைத்திருப்பார்கள். மேலும் மத்தியில் அதிகார மையத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், இங்குள்ள மாநில அதிகார மையத்திடம் இருந்து அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள்.

    அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும். பிளவு என்ற சொல் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதுபோல் செய்து இருக்கிறார்கள். அவர்களே செய்தபோது, இவர்களால் முடியாதா?. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை கூட்டணி விஷயமாக சந்தித்து இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்.

    வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாவிட்டால், இனி அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்தினால் கட்சி வளரும். அவர்தான் சொத்து, மூலதனம். அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அமர பா.ஜ.க.வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
    • மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 24-ந்தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது.

    தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி, மாவட்ட தலைநகரங்களில், ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி (சனிக்கிழமை) கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநிலம் ஏரிப்பாக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கதிர்வேல் (வயது 55) தனது தாய் ஆனந்தாயுடன் வசித்து வருகிறார்.

    ஏரிப்பாக்கத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.

    அந்த நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மரபீரோவில் இருந்த செயின், அரசு உதவித்தொகை பெற்றதில் மீதி சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள்.

    கும்பாபிஷேகத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனதை கண்டு ஆனந்தாய், கதிர்வேல் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசில் ஆனந்தாய் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பாபிஷேகத்திற்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன்.
    • 'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.

    கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று டாக்டர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்.

    அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முன்னதாக பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் கால்பதித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினார்.

    'காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி அவர் வசமே நின்றது.

    தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது

    இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிக் கனிகளை சுவைத்தார்.

    பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அவருக்கானதாக அமையவில்லை. இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே அவரை வந்து தழுவியது. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.

    குமரி அனந்தன் 5 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.

    பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.

    அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.

    • தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார்.
    • குமரி அனந்தனின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிர் பிரிந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர் குமரி அனந்தன். மறைந்த வசந்தகுமார் இவரது சகோதரர் ஆவார்.

    குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    ×