என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம்.
- பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை:
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
- முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை.
- ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான்.
அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம்.
பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது.
எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம்.
ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்துள்ளார்.
- அமைச்சர் பொன்முடி இல்லத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில், துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் தி.மு.க. ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிக்க அவர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இந்து தர்மத்தின் மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தமிழக பா.ஜ.க., பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் அரசியல் பேச்சுக்களின் தரம் என பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இதுதான் தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். திரு. பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் காதி அமைச்சராகவும் இருந்தார். தமிழக இளைஞர்கள் இந்த அசுத்தத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதா? இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது மற்றும் அநாகரீகமானது.
இவ்வளவு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக, வெட்கப்பட்டு தலையை குனிந்து கொள்ளுங்கள், திரு. மு.க.ஸ்டாலின். இன்று அவரை ஒரு கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் முன்னேறுவார்கள் என்று தி.மு.க. நினைத்தால், துரதிர்ஷ்டவசமாக அது தவறான ஒன்று தான்.
இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது. எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள், திரு. மு.க. ஸ்டாலின்.
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை தீபாராதனை நடந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.
பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
- பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது கணினி மூலமாக டோக்கன் பதிவு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஊழியர் கணினி பழுதில் இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என்று கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த பெண் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பணியில் இருந்த டாக்டர்களிடம், நாள் ஒன்றுக்கு நோயாளிகள் வரும் எண்ணிக்கை, எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது? பொதுவான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகம், கட்டுப்போடும் இடம், எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கும் அறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது நோயாளிகள் பிரிவுக்கு சென்றார்.
அங்கே சிகிச்சையில் இருந்த மூதாட்டி உள்பட நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனை வளாகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த கூடன்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பதிலளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழிசை இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
- சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.
சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குருமூர்த்தி உடனான ஆலோசனையின்போது அமித்ஷா உடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.
- ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு அவரை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, நேரில் வந்து ஆறுதல் சொன்ன அமித்ஷா அவர்களுக்கும் நன்றி.
தந்தை மறைந்த செய்தி கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு, பா.ஜ.க. கட்சி உங்களோடு துணை நிற்கிறது என்று கூறினார்கள்.
அதேபோல் ஜே.பி.நட்டா, சந்தோஷ், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கள் இல்லத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. அமித்ஷா அவர்களும் என் தந்தையை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?
- பொன்முடி போன்ற முதலைகளை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என்று மக்கள் அறிவார்கள்!
தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"உத்தம சிகாமணி" மு.க.ஸ்டாலின் அவர்களே!
தி.மு.க. போன்ற குடும்ப கட்சிகளில் துணை பொது செயலாளருக்கும் சரி அடிப்படை உறுப்பினருக்கும் சரி, அதிகாரம் என்பது சூனியம் தான்!
இந்நிலையில், மனித மாண்புகளுக்கு எந்த விதமான யோக்கியத்தையும் இல்லாத பொன்முடியை வெறும் பொறுப்பு-நீக்கம் செய்வதோடு முடிந்துவிடாது உங்கள் அடிப்படை நேர்மையை நிரூபிக்கும் இடம்.
பெண்களை இழிவு செய்ததோடு தமிழகத்தின் பழம்பெருமைமிக்க அடையாளமாகவும், தமிழ் மொழியை வளம் கொழிக்க வைத்த சைவ - வைணவ சமயங்களையும், அதன் புனித அடையாளங்களையும் எவ்வளவு இழிவுபடுத்திப் பேச முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியுள்ள பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?
மேலும், தொடர் ஈனப்பேச்சாளன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற கீழ் மட்ட நிர்வாகிகளையே நீக்குவதுபோல் நீக்கிவிட்டு சில வாரங்களிலேயே மறுவாழ்வு கொடுக்கும் திமுக, பொன்முடி போன்ற முதலைகளை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என்று மக்கள் அறிவார்கள்!
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவது மட்டுமே நீங்கள் திராணியுள்ள தலைவர் மற்றும் மாண்புள்ள முதல்வர் என்பதை நிரூபிக்கும்!
மற்ற அறிவிப்புகளெல்லாம் உங்கள் பலவீனத்தின் எடுத்துக்காட்டே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில், அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை அமைச்சர் பொன்முடி, 'ஓசி பயணம்' என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையானது.
மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, எனக்கோ ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று கூறினார்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று கேட்டார்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார்.
இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் உள்ளார்.






