என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
    • ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமான வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவி வந்தது . மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.

    இதனால் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏரிச்சாலை மற்றும் ஒரு சில பகுதிகளில் பணியாட்கள் நெருப்பு மூட்டி குளிர் காயும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் கடும் பனி உருவாகும் என்பதால் கடும் உறைபனியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெட்ப நிலை உருவாகியுள்ள நிலையில் மேலும் குளிர் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உறைபனி அதிக நாட்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாலை நேரங்களில் பனிச்சாரலுடன் கூடிய பனிமூட்டத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை, அதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
    • ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.

    அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.

    நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார்.
    • திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    தொடர் சிகிச்சைக்குப்பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அக்.10-ந்தேதி அவர் வீடு திரும்பினார்.

    இதையடுத்து, வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (100) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வருகின்றனர்.

    • உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
    • 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.

    உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

    ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.

    இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.

    இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.

    ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.

    ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.

    அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

    தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

    • பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
    • பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

    எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

    இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எகிப்துடன் இந்திய அணி மோதியது.
    • இதில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சென்னை:

    5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர் செட்டில் வென்றார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

    பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இந்திய அணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

    • ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
    • மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.

    வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்

    பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்

    குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.

    மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல

    அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.

    எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்

    செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக

    வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

    எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா

    திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை

    முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது

    முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (டிஏ) சரண்டா், உயா்க்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் ஊா்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

    60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?

    அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.

    பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.

    இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.

    நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?

    அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.

    இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.

    பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.

    இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.

    தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
    • அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.

    அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.

    கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

    இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.

    மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    • பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.11 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ள அமராவதி அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×