என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.
    • மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், தமிழக அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக துணை வேந்தர்கள் கூறுகையில், தமிழக அரசை பகைத்துக்கொண்டு ஆளுநர் அழைக்கும் மாநாட்டிற்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை.

    மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெநாதன் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் மாநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர்.

    • கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
    • உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    கருணாநிதி தலைமையில் கடந்த 1996-2001 மற்றும் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி வேல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

    எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல் முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல் முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும் படி, கடலூர் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

    • 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் கூறியதாவது:

    * மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.

    * 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    * கலைஞர் உரிமைத்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

    * மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் ஜூனில் 4-ம் கட்டமாக 9000 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    * 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    * தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
    • பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

    தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    இந்த நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்தார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    ஓசூர்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.

    • ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
    • துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    இந்த நிலையில் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் குருவிகளாக செல்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த இருந்த 16.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான போதை பொருட்களும் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் ரூ.9 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப் பொருளை தனது உடமையில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஹேமாஸ்ரீ என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதால் சர்ச்சை.
    • ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள்.

    சுவாமிமலை:

    மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே சூரியனார்கோவில் ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார்.

    54 வயதான இவர் கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது காட்டுத்தீபோல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மகாலிங்க சுவாமிகள் ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்து யாத்திரை புறப்பட்டார்.

    இந்த நிலையில், மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.

    அந்த போஸ்டரில், மகாலிங்க சுவாமியின் சமீப கால செயல்பாடுகளின் விமர்சனங்களும், அவரது திருமணத்தை குறித்த விமர்சனங்களும், அவரது படங்களுடன் கூடிய வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

    மகாலிங்க சுவாமிகள் மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வரக்கூடாது என்ற வகையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக திவாரியை அழைத்துச் சென்றனர்.
    • கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வழியாக நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு ஜோலார்பேட்டை வந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் ரெயில்வே போலீசார் ராஜ்குமார், செந்தில் ராஜா, சதீஷ்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ் 4 பெட்டியில் இருக்கை எண் 28-ல் பயணம் செய்த ஒடிசா மாநிலம் பலாங்கிரியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 13 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக அபினேஷ் திவாரியை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அபினேஷ் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
    • சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.

    குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.

    இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

    வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும்.
    • கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார் அப்போது அவர் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.

    பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேச தலைவர்கள் அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் பிடித்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் ,குழு விவாதம் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் .

    பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறங்கள் விழுமியங்கள், பாலின சமத்துவம், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கட்டகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் .

    இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .

    அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் பயிற்சிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8 வது மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

    இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    • பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
    • மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம்.

    சென்னை:

    காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி ஆகும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வருகிற 27-ந் தேதிக்குள் தமிழகத்தில் தங்கி உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுபோன்று சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் அதன் பின்னர் அவர்களும் சென்னையை விட்டு வெளி யேறிவிட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் வேலூர் பகுதியிலும் சிலர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக வருகிற 29-ந்தேதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இதன் பிறகும் வெளியேறாத பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×