என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: ஓசூர் தமிழக எல்லையில் தொடர்ந்து போலீசார் வாகன சோதனை
- மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.
ஓசூர்:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.
இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.






