என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.
    • கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

    பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். கடலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்டத்திலும் கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    * ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிர் இழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கின்றது.

    * தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.

    * வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

    * மதுபானம் விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    * கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

    * மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    * தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
    • சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு (வயது 40). இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா.

    இவர்களது குழந்தைகள் தியா (10), ரிதன் (3). தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். பிரபுவின் மாமனார் சென்னை அடையாறை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(61) என்பவரும் உடன் சென்றார்.

    பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நேற்று சென்னை ரெயிலில் திரும்ப திட்டமிட்டனர். அதிகாலையில் ரெயிலில் செல்லவேண்டி இருந்ததால் இரவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள 5 மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கினர்.

    அப்போது குழந்தைகள், முத்துக்கிருஷ்ணனுக்கு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். இந்த வேளையில் ஓட்டலில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியானார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க. எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை, சந்திக்காத சவால்கள் இல்லை, சாதிக்காத திட்டங்கள் இல்லை.
    • தேச பக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    * தி.மு.க. எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை, சந்திக்காத சவால்கள் இல்லை, சாதிக்காத திட்டங்கள் இல்லை.

    * தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் தி.மு.க. என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும்.

    * மக்களின் பேராதரவுடன் தி.மு.க.வே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.

    * திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்.

    * நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை.

    * ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயக போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

    * நம்முடைய உறுதியை சிறுசிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியாது.

    * சட்டம், ஒழுங்கு தொடர்பாக இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகளை பூதாகரமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

    * தேச பக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.

    * மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி மூழ்கி உயிரிழந்தார்.
    • கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.

    மதுரை:

    மதுரை கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் அரசு அனுமதியின்றி கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 4 வயதான சிறுமி ஆருத்ரா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் மழலையர் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைத்தனர்.

    சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாக பராமரிப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் உதவியாளர் வைர மணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நீதி மன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். சிறுமி இறந்த தனியார் மழலையர் பள்ளியில் உரிமத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட் டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

    • நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன.
    • நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.

    அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
    • சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதுரவாயலை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன் மாணவியை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வகுப்பறையில் தனியாக இருந்த போது ஆசிரியர் மோகன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது பற்றி மாணவி பயந்து போய் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

    ஆனால் அறிவியல் ஆசிரியர் மோகன் மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்டது பற்றி பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தார்.

    இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தங்கள் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் விருகம் பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது ஆசிரியர் மோகன் திடீரென மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கினார். இதில் மயக்கம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு ஆசிரியர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
    • நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2500 கன அடியாக குறைந்து உள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும், சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

    • மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை இன்று வெளியிட்டார்.

    மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக் கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 -தனை அறிமுகப்படுத்தியது.

    இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்த்திடும் வகையில், ஒன்றிய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசும் ஊக்கத்தொகை வழங்கிட இந்த திட்டம் வழிவகை செய்யும். இதன்மூலம், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 60 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
    • பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ந்தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

    மேலும், பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாா்.

    அவரது வருகையையொட்டி பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க. தலைவா் நயினாா் நாகேந்திரன், பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளாா்.

    அவா்களது ஆலோசனை படி பா.ஜ.க.வினரையும், கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வது தொடா்பாக ஜெ.பி.நட்டா வருகையின்போது ஆலோசனை நடத்தப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
    • ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    * மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது.

    * ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.

    * தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையால்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.

    * ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    * தமிழ்நாட்டில் ரூ.30000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60000 நபர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
    • நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலுவின் இல்ல திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்ததாக கூறியதால் அ.தி.மு.க.வினருக்கு கோபம் வருகிறது.

    * ஊர்ந்து என்று கூறியது பிடிக்கவில்லை என்றால் தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளலாம் என்றேன்.

    * தவழ்ந்து என நான் கூறவில்லை, எடப்பாடி பழனிசாமியே தன்னை அப்படிதான் வெளிப்படுத்துகிறார்.

    * மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே எடுத்துக்காட்டான ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

    * 2026-ம் ஆண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்.

    * வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    * நம்மை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் எத்தகைய கூட்டணி வந்தாலும் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    * நெருக்கடிகள் பலவற்றை சந்தித்தே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

    * எமர்ஜென்சியை பார்த்து பயப்படாமல் தீரத்துடன் எதிர்த்தவர்கள் நாம் என்றார்.

    ×