என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.
இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வு.
- பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மக்களின் குறைகளைக் களைந்து ஏற்றத்துக்கு முதற்படியாய் முதல்வரின் முகவரித்துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது திராவிட மாடல் அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை!
பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
- பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.
பாஜக கூட்டணியில் இருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது'' எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?
தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி, நெசவாளர் சமுதாயத்தினர் நலனுக்காக சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, எனப் பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது.
2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டுப் பாதிப் பணிகள் முடிந்த நிலையில் மோடி அரசு கிடப்பில் போட்டது. 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்ட அந்தத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு புதுவடிவத்தை உருவாக்கி நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து பணிகள் நடந்து வருகின்றன.
மன்மோகன் சிங் ஆட்சிக்கு முன்பு வி.பி.சிங் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது கலைஞர் வலியுறுத்தியதால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் உள்நாட்டு முனையத்திற்குக் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.
பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.
ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு. ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்குச் சேவகம் செய்து, மாநில உரிமையைப் பறிகொடுத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா தீரத்தோடு எதிர்த்தார். அதனையெல்லாம் பழனிசாமியோ பயத்தோடு ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுகே வந்தார். பழனிசாமி அமித்ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார்.
ஒன்றிய அரசின் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலைக்காக, வனங்களையும், வயல்களையும் பலி கொடுக்கத் தயாரானார். காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போதெல்லாம் ஜெயலலிதாவிடம் இருந்து கடுமையாக அறிக்கை வரும். போராட்டம் நடத்துவார். ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான பழனிசாமியிடம் இருந்து ஓர் அறிக்கையாவது வந்ததா? அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.
தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி கிடையாது என்று அவமானப்படுத்தப்படுத்தி, தமிழர்களின் தன்மானம் சீண்டப்பட்ட போது பழனிசாமி எதிர்த்து குரல் கொடுத்தாரா? துணை வேந்தர் நியமனம் தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தி, இந்தியா முழுமைக்கும் அதிகாரம் பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல சூரப்பா விவகாரத்தில் சூரத்தனம் காட்டினாரா பழனிசாமி?
ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனி ராஜ்ஜியம் நடத்திய போது அன்றை எதிர்க் கட்சியான திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால், முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு காட்டாமல் பல்லிளித்துக் கொண்டிருந்தார். இப்படி எத்தனை எத்தனை துரோகங்கள். தலைவிக்குத் துரோகம் செய்துவிட்டு டெல்லி தலைமைக்குக் கட்டுப்படும் கோழை பழனிசாமி, மிரட்டல் பற்றியெல்லாம் பேச அருகதை இல்லை!
நீட் தேர்வை அனுமதித்து அப்பாவி ஏழை நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நாசமாக்கியது, தமிழ்நாட்டிற்குப் பாரபட்சமான நிதிப் பகிர்வு அளிக்கும் GST யை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து முஸ்லிம்களின் முதுகில் குத்தியது, உழவர்களைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது, மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு, கனிம வளச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலம் விடக் காரணமாக இருந்தது என மோடி அரசுக்குத் துணையாக நின்ற விஷயங்கள் எல்லாம் அதிமுக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.
2019 – 2024 மோடி ஆட்சியில் திமுக கூட்டணி எம்.பி-கள் 9,695 கேள்விகளை ஐந்தாண்டில் மக்களவையில் எழுப்பினார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்தார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் தமிழ்நாட்டு எம்.பி-கள் 5-ஆவது இடத்தில் இருந்தனர். கட்சிகள் வாரியாக கேள்விகள் எழுப்பியதில் திமுக 5வது இடத்தில் இடம் பெற்றது. நாடாளுமன்றத்தில் அதிமுக சாதித்தது என்ன? என பழனிசாமி புள்ளிவிவரம் சொல்லுவாரா?
நீட் தேர்வைத் திரும்பப் பெறத் தொடர் போராட்டம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல், காவிரி, மேக தாட்டு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடியது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துக்கு எதிர்ப்பு, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
''அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது' என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்ட போது பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கை.
கூட்டணி மகிழ்ச்சி என்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியதுதானே! ஏன் செய்யவில்லை? 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8,9ம் தேதிகளில் அவர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது திருச்சியில் 2 நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே செல்கிறார்.
மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.
இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
- காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார்.
நெல்லை பெருமாள்புரத்தில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் எல்லா எம்.எல்.ஏ.க்களையும் வேலை பார்க்க சொல்கிறார். அடுத்த ஓராண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அப்படியென்றால் கடந்த 4 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள் எந்த வேலையையும் செய்யவில்லை என்பதை தான் அது குறிக்கிறது.
அவர் எதிர்கட்சி காரர்களை பார்த்து உங்களது கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அவர்களுடைய கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது பரவாயில்லை. எதிர்கட்சி கூட்டணியை போய் முதல்-அமைச்சர் சரியில்லை என சொல்லுகிறார். தோல்வி பயத்திலேயே இவ்வாறு அவர் கூறி கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார். தீர்மானம் மட்டுமல்லாது, சட்ட மன்றத்திலும் கவர்னரை நிறைய விமர்சனம் செய்தார்கள். தற்போது கவர்னருடன் அதிகாரப் போட்டி இல்லை என்று சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
- சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட 31 மாவட்டங்களில் சுமார் ஒன்றை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகி்னறனர்.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் அனுமதித்தனர்.
இந்த நிலையில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவிகள் சிலர் நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறில் இருந்து 1.40 மணிக்கு வந்த நிலையில் மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேரம் கடந்த காரணத்தால் தேர்வு எழுதாமல் மாணவி ப்ரீத்தி திருப்பிச் சென்றார்.
இதேபோல், சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால், கதறி அழுத மாணவியை சமாதானம் செய்து சக மாணவர்களின் பெற்றோர் ஆறுதல் செய்தனர்.
- ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 6-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 8-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 9, 10-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் வரும் 8-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வரும் 6-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
- கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சென்னை:
மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 6 இடங்களில் நாளை வணிகர் சங்கத்தினர் மாநாடு நடத்துகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
42-வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடத்தப்படுவதால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கிறார்கள். இதற்காக மதுராந்தகத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்பு நிகழ்த்த உள்ளார். மாநாட்டு பிரகடனத் தீர்மானங்களை மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை முன்மொழிகிறார்.
காஞ்சி மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் பிரபாகர், வடக்கு மாவட்ட தலைவர் உத்திரகுமார் மாநாட்டு பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணியளவில் மதுராந்தகம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
போகும் வழியில் கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று வணிகர்களுக்கு விருதுகள் வழங்கி நலத்திட்ட உதவிகளும் கொடுக்கிறார்.
அதன் பிறகு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் நாளை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் படப்பை கரசங்சாலில் நாளை வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் திருவண்ணாமலையில் நாளை வணிகர் தின விழா நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் மு.அருண்குமார் மாநாட்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் வணிகர் தினம் நடத்துகிறார். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் த.வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா நடத்தும் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
6 இடங்களில் வணிகர்கள் மாநாடு நடத்துவதால் நாளை கடைகள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
- பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-காங்கேயம் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






