என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வணிகர்கள் தின விழா கோலாகல கொண்டாட்டம் - மதுராந்தகம் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
- கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சென்னை:
மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 6 இடங்களில் நாளை வணிகர் சங்கத்தினர் மாநாடு நடத்துகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
42-வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடத்தப்படுவதால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கிறார்கள். இதற்காக மதுராந்தகத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்பு நிகழ்த்த உள்ளார். மாநாட்டு பிரகடனத் தீர்மானங்களை மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை முன்மொழிகிறார்.
காஞ்சி மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் பிரபாகர், வடக்கு மாவட்ட தலைவர் உத்திரகுமார் மாநாட்டு பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணியளவில் மதுராந்தகம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
போகும் வழியில் கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று வணிகர்களுக்கு விருதுகள் வழங்கி நலத்திட்ட உதவிகளும் கொடுக்கிறார்.
அதன் பிறகு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் நாளை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் படப்பை கரசங்சாலில் நாளை வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் திருவண்ணாமலையில் நாளை வணிகர் தின விழா நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் மு.அருண்குமார் மாநாட்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் வணிகர் தினம் நடத்துகிறார். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் த.வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா நடத்தும் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
6 இடங்களில் வணிகர்கள் மாநாடு நடத்துவதால் நாளை கடைகள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.






