என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், விபி-ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர். மத்திய அரசின் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்காக பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இருப்பினும் சில்லரை, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது உள்ளிட்ட பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேர்கிறது. இதனிடையே, தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக மின்சார பேருந்து பல வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கான ஆலோசனைகளை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு சிறிய செயல், ஒரு பெரிய மாற்றம் என்ற தலைப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள வீடியோவில்,
பெரும்பாக்கம்- பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்படும் 102P மின்சார பேருந்தின் நடத்துனரான அபிநயா என்பவர், பயணத்தின் போது மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர்.
- எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அவரைத்தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.
- தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி.
- திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் நினைவு நாள் இன்று.
தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,
திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!
தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது.
- கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மீறிய ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு கடந்த 18-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உரிய முடிவை அறிவிக்கும்.
சேலத்தில் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டம் பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அல்ல. கட்சியின் விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அதிகாரம் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.
எனவே, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி வரை அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் தலைவர்.
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். தி.நகரில் உள்ள அலுவலகமே கட்சியின் தலைமை அலுவலகம், சின்னமும் எங்களிடமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்திற்கு திருப்புமுனையாக அமையும் நிகழ்வு.
- நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் நேற்று சென்னை வந்த தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசும் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் மற்றும் த.வெ.க. மூத்த நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் காங்கிரஸ் எம்பி., எம்எல்ஏக்களும் பங்கேற்பதாக அழைப்பிதழ் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் இவ்விழாவை புறக்கணித்துள்ளனர்.
மேலும் விழாவில் பேசிய திருச்சி வேலுசாமி, பாவப்பட்டவர்களை ரட்சிக்கவும், ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றவும் தோன்றினார் ஏசு. பாவிகள் ரட்சிப்பு, ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றும் எண்ணம்கொண்டோர் மட்டுமே இங்கு கூடியுள்ளோம். தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்திற்கு திருப்புமுனையாக அமையும் நிகழ்வு. அதற்கு பின்னணியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள், புரிந்தவர்கள் கை தட்டுவார்கள். நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும் என்றார்.
- மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை இவர்கள் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றத்திற்காக வருகிற 5-ந்தேதிவரை 12 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 100-க் கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
இதில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடிஇறங்கு தளத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதம் முழுவதும் கடலுக்கு செல்ல முடியவில்லை. 25 நாட்களுக்கு மேலாக தடை இருந்ததால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது கடல் இயல்பு நிலைக்கு மாறி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு சென்று வருகிறோம். கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. நேற்று கைதான 12 மீனவர்களுடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மற்ற மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
- வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை எகிறி காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து, நேற்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் பதிவு செய்துவிட்டது.
அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் கூட இடையில் சில நாட்கள் குறைகிறது. ஆனால் வெள்ளி விலையோ தடையே இல்லாமல் உச்சத்தை எட்டுகிறது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
அதனை தொடர்ந்து இன்றும் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 244 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
19-12-2025- ஒரு கிராம் ரூ.221
- ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.
- அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக வரலாற்றின்
மாபெரும் சகாப்தம்!
ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.
அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...
கறுப்பு-வெள்ளை-சிவப்பு மூவர்ணத்தையும் ,
இரட்டை இலையையும் தமிழகத்திற்கான பாதுகாப்பு அரணாய் விட்டு சென்று,
அ.தி.மு.க. எனும் எஃகு கோட்டையை உருவாக்கிய இதய தெய்வம், #எங்கள்_வாத்தியார்_MGR அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்.
நாற்காலிக்காக அரசியலுக்கு வராமல், நலிந்தவர்களின் நல்வாழ்விற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நம் புரட்சித்தலைவர் அவர்கள்.
புரட்சித்தலைவரின் உடன்பிறப்புகளுக்கு வருகின்ற தேர்தல் களம், நம் தலைவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் வலிமையை பறைசாற்றும் தளம்.
துரோகங்களை வீழ்த்தி, எதிரிகளை முறியடித்து, மீண்டும் ஏழை எளியோரின் ஆட்சியை,
இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிவந்த , கழகத்தின் மூன்றாம் அத்தியாயம் ,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரச்செய்ய புரட்சித் தலைவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்! என்று கூறப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது.
- ‘கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்களும் எழுகிறது. இதுபோன்ற மருந்துகள் குறித்து 104 என்ற எண்ணில் மட்டுமே பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, 'கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு குறித்து குறிப்பிட்ட 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
- ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
- பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






