என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
- கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 29). இவர் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித் குமாரை சட்ட விரோதமாக தனிப்பிரிவு போலீசார் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்த அஜித் குமார் பரிதாபமாக இறந்தார்.
அஜித் குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சிறப்பு தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் 5 போலீஸ்காரர்களுக்கும் வருகிற 30-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
- தமிழர்கள் ஓரணியில் திரள்வோம்.
சிதம்பரம்:
சிதம்பரம் லால்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் திறப்பு இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு நூற்றாண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது:-
சிதம்பரத்தில் நந்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்காக நந்தனார் பாடுபட்டார். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்.இளையபெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு அறிக்கை வெளியிட்டார்.
1931-ம் ஆண்டு மக்கள் தொகையில் ஒன்றரை சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று இருந்தனர். தற்போது 78 சதவீதம் பட்டியலின மக்கள் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் தற்போது தி.மு.க. அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். 2026-ல் தி.மு.க ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம்.
தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும். அதாவது 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உரியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொதுவாக செய்தி துறை வாயிலாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- அரசின் தோல்வியை மறைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.
மதுரை:
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம். இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அவர்கள் அப்படியானால் மக்களுடன் முதல்வர் என்று ஏற்கனவே தொடங்கிய அந்த திட்டம் காலாவதி ஆகி விட்டதா? அல்லது மக்களுடைய கவனத்தை பெறவில்லையா?
நீங்கள் மக்களை தேடி அரசு என்று சொல்லுகிறீர்கள். இந்த நான்காண்டுகளில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று இன்றைக்கு மக்கள் கேள்வியாக கேட்கிறார்கள். அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திட்டங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங்பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் மக்கள் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகள். தங்கள் ஆட்சி மக்களிடம் நம்பிக்கை இழந்ததன் காரணமாக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்களுடைய முகமூடியை பயன்படுத்தி இந்த தகவல்களை எல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.
பொதுவாக செய்தி துறை வாயிலாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இப்போது மக்கள் நன்மதிப்பை பெற்ற 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து செய்திகளை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்தால் ஒருவேளை மக்களிடம் வரவேற்பு ஏற்படும் என்று நினைத்தால் அது எடுபடாது.
ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். துறையினுடைய செயலாளர்களே வெளியிடலாமே? எதற்கு இந்த நான்கு அதிகாரிகளை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள்? நீங்கள் எதை சொன்னாலும் இனிமேல் இந்த மக்கள் நம்ப தயாராக இல்லை. மக்களின் நம்பிக்கையில் தோல்வி அடைந்த இந்த அரசு, அந்த தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு அதிகாரிகள் முகவரியை பயன்படுத்தி உண்மைக்கு மாறாக பொய்யான செய்திகளை பரப்பி, அரசுக்கு முட்டுக் கொடுக்க நினைக்கிறது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார். அரசின் தோல்வியை மறைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும். அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கின்ற திட்டங்கள் அறிவிப்பு மக்களுக்கு எந்த பயனும் தராது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார்.
- தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் 'திட்டம் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம். தேர்தல் வந்தால்தான் முதலமைச்சருக்கு மக்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்.
கொஞ்சம் கூட ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா..? எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டி வைத்து வாங்கிய மனுக்கள் என்னவானது..? சாவியை அவரே வைத்திருந்தார். முதலமைச்சரான பின் மனுக்களை நானே படித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார். 4 ஆண்டில் தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை ஒருமுறையேனும் ஸ்டாலின் சந்தித்தது உண்டா..? "பொய்களுடன் ஸ்டாலின்" என்பதே திட்டத்தின் உண்மையான பெயராக இருக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
அரசின் செய்தித் தொடர்பு அதிகாரிகளாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அறிவித்துள்ளார் இதன் மூலம் முதலமைச்சர். தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் நான்கு அதிகாரிகளை அவமதித்து விட்டார். இனி 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பி.ஆர்.ஓ. என்று மற்றவர்கள் கூப்பிடுவர்.
ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத் துறை இருக்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளராக நியமிப்பது ஏன்..? அரசின் திட்டங்களை அமைச்சர்கள் மக்களுக்கு கூறாமல் அதிகாரிகள் கூறினால் அதன் பெயர் எமர்ஜென்சி நிலை. இப்போது மக்களாட்சி இல்லை, அதிகாரிகள் ஆட்சியே நடக்கிறது என்பதற்கு இந்த நியமனமே உதாரணமாகும். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெறுகிறது.
கேரளாவை போல் 'ப' வடிவில் மாணவர்களை அமரவைப்பதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா..? 3,600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் கழிவறை உட்பட அடிப்படை வசதியில்லை.
நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். ஆனால் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அன்பில் மகேஷ் திறமையற்றவர், அறிவு இருப்பவர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர்களாக நியமிக்கலாம். அன்பில் மகேசை திரைத்துறை அமைச்சராக போடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
- ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இளைய பெருமாளின் போராட்டம் ஆதி திராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது.
* வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடிப்படையே இளையபெருமாள் கமிட்டி அறிக்கை தான்.
* சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் தொல்.திருமாவளவன்.
* தி.மு.க. அரசுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் துணையாக உள்ளனர்.
* ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் பலிக்காது.
* முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
* கல்வி அளிப்பதன் மூலம் தீண்டாமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
* ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
* சமூக விடுதலை பயணம் என்பது நீண்ட நெடிய பயணம் என்றார்.
- வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்கு உட்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் 1,544 தமிழ், 2,260 ஆங்கிலம், 3,190 கணிதம், 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 2,388 பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை பெற்றுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது சீமான் தரப்பில், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி தனது மனு நிராகரிக்கப்படுகிறது. அரசியல் காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதால் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து பாஸ்போர்ட் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
- தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* காமராஜர் பிறந்தநாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தவர் இளைய பெருமாள். அவரின் அரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.
* 2021-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாளில் தீர்வு என உறுதி தந்தேன்.
* சொன்னதை போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனு அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனிதுறை உருவாக்கப்பட்டது.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
* தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
* மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு.
* தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.
- அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
- பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
* மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம்.
* தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.
* பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை வெளியிட்டது. இதன்படி மின்வாகன உற்பத்தி துறையில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி மின்சார வாகனங்களுக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளை இந்த ஆண்டு இறுதிவரை வழங்க அனுமதிக்கப்பட்டது.
மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தனிநபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பஸ்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இன்னும் புதிய பஸ்கள் வர இருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேக குறைதீர் மையங்களும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர்.
- அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் காமராஜர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் தலைநிமிரச் செய்த தலைமகன் என்றால் அவர் கர்மவீரர் காமராசர் தான். அந்தப் பெருமகனாரின் 123-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை விட அதிகமாக செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் உன்னத நாள் தான் இந்த நாளாகும்.
தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். இன்றைக்கு இருப்பதைப் போல சொல்லி விட்டு செய்யாமல் இருந்த தலைவர் அல்ல அவர், ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்தி விட்டு, அதை செய்ய வேண்டியது எனது கடமை என்று கூறி விளம்பரம் தேடாமல் இருந்த பெருமகன் அவர்.
அவர் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாரோ, அத்தகைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைக்கும் என்றால் அது தான் உண்மையான பொற்காலமாக இருக்கும். அதை ஏற்படுத்துவதற்காக உழைக்க நாம் அனைவரும் அப்பெருமகனின் பிறந்தநாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்தவர் காமராஜர்.
- தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் காமராஜர்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினம் இன்று.
ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.






