என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி மாறுதல்"

    • வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்கு உட்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வில் 1,544 தமிழ், 2,260 ஆங்கிலம், 3,190 கணிதம், 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களில் 2,388 பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை பெற்றுச் சென்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
    • பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

    திருப்பூர் :

    கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது.

    பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 70, 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை கூட, சில பள்ளிகளில் காணப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடம் இல்லை.இதனால் ஒரே வகுப்பறையில், 60, 70 மாணவர்களை அமர்த்தி பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. சில பள்ளிகளில், பள்ளி வளாகங்களில் உள்ள மரத்தடியில் அமர்த்தி பாடம் கற்பிக்கின்றனர்.பாடம் கற்பிக்கும் பணி மட்டுமின்றி, மாணவர்களின் வருகை துவங்கி, பாட போதிப்பு தொடர்பான விவரங்களை அதற்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.இதனால் அதிக பணிச்சுமை, நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் கல்வி போதிப்பில், முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நெருக்கடியான சூழலில் பணிபுரிய விரும்பாத ஆசிரியர்கள் பலர், பணி மாறுதல் பெற்று செல்கின்றனர்.

    இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    • பணி மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்தவேண்டும் என்று செவிலியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் இந்திரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் கனகலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை எம்.ஆர்.பி. மூலம் காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதற்கட்ட பதவி உயர்வான காலியாக உள்ள பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.

    சமுதாய நல செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மாநில அரசின் முக்கிய திட்டமான எம்.ஆர்.எம்.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சில்லரை செலவின தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இதை வழங்கிட வேண்டும். துணை சுகாதார மைய குடியிருப்பு கட்டிடங்கள் பல ஆண்டுகளாக செயலிழந்து விட்டது. ஆனால் ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகர சுகாதார மையங்களில் தொகுப்பூதியத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர்களை காலமுறை ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய உயர்மட்டக்குழு விவாதித்து வருவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும்.

    ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×