என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.
    • பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.

    நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

    வழக்கப்படி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.

    இந்நிலையில் இன்று மாலை தொடங்கிய தீநீர் விருந்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.

    பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார்.

    அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருக்கும் பங்கேற்றனர். 

    • 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
    • தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனால் தூய்மை பணியாளர்களுடன் சமரசம் ஏற்பட்டது.

    இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.

    அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மீதமுள்ள 4இல் 2 மண்டலங்களை தனியார் மயமாக்கும் முடிவை தற்போதைய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியறுத்தினார்.  

    • ஆறுமுகம் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
    • தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.

    அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.

    கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!
    • மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!

    மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு என்ற உறுதியுடன் - முத்தமிழறிஞர் கலைஞர் பெற்று தந்த உரிமையுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணங்கினேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
    • 7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரெயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.

    மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதாவது 7.40 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரெயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் உபயோகமாக இருந்து வருகிறது.

    7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா இன்று மதுரை ரெயில் நிலைய சந்திப்பின் 4-வது நடைமேடையில் ரெயில் என்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரெயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வைகை ரெயில் எக்ஸ்பிரஸ் என்ஜின் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் தங்களுக்கான அனுபவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    • கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர்.
    • கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.

    அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறார்கள். 

    • முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உணவு பரிமாறினார்.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

    இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.

    இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

    தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்:

    * தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

    * தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

    * தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

    * தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

    * தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

    * பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

    * தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்

    • சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
    • அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

     

    பெசன்ட் நகர் எலைட் பீச்சில் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கண் மருத்துவமனை (Chennai Eye Care Hospital) மருத்துவ இயக்குநர் டாக்டர் மனோகர் பாபு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

    அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தார்.
    • தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசுப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

    இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் தினமும் பள்ளிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து தான் வருகை தருகிறார் என்று குறிப்பிடத்தக்கது. 

    • உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

    சென்னை:

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டி இருக்கிறார்.

    பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் நிரூபித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் மாபெரும் இயக்கமாக முன்னெடுப்பதற்கான முதல்கட்டமாக வாக்குத்திருடரே பதவி விலகு என்னும் பிரசார இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் முன்னெடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது

    இதனைத் தொடர்ந்து இந்த பிரசாரத்தில் முதல்கட்டமாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது

     

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில அமைப்புச் செயலாளர் ராம்மோகன் மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ்,

    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிந்துஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் தினேஷ், கிருத்திகா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுமதி அன்பரசன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசினா சையத், மாவட்ட தலைவர்கள் முத்தழகன் டெல்லி பாபு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
    • ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.

    ×