என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Express Train"

    • பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
    • 7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரெயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.

    மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதாவது 7.40 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரெயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் உபயோகமாக இருந்து வருகிறது.

    7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா இன்று மதுரை ரெயில் நிலைய சந்திப்பின் 4-வது நடைமேடையில் ரெயில் என்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரெயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வைகை ரெயில் எக்ஸ்பிரஸ் என்ஜின் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் தங்களுக்கான அனுபவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    • வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை:

    இந்தியா முழுவதும் இன்று 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 46-வது பிறந்த நாளும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ரெயில் என்ஜினுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து ரெயில் என்ஜினுக்கு வாழை மரம் தோரணம் கட்டி ரெயில் பெட்டிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தும், கேக் வெட்டியும், ரெயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை-மதுரைக்கு இடையே பகல் நேர விரைவு ரெயிலாக உள்ள இந்த ரெயில் தென்மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரசுக்கு உண்டு. வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறுமார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும்.

    இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. நாள்தோறும் இந்த ரெயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

    ஒரு வழிப்பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆகும். ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 46 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதனை இயக்கும் பைலட்டுகளுக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் சக பயணிகளுக்கும் வழங்கினர்.

    ×