என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கும் பொருட்டு, மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தமிழக மக்களைக் காக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழகக் காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது.
    • கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.


    பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
    • தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை அமைத்து உள்ளார்.

    அதன்படி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு, மேற்பார்வை குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ந் தேதி (புதன்கிழமை) நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இவர்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தி.மு.க.வில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று மாலையில் நீலகிரி, திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேலும் வருகிற 5-ந்தேதி வரை தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்துகிறது.

    • சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?
    • பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மறுநாள் திருச்சிக்கு சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி சிறப்பு வழிபாடு செய்து இருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் திருச்சி, ராமேசுவரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அலுவல் ரீதியானதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


    * பிரதமரின் பயணம் தனிப்பட்ட முறையிலானது என்றால் அவர் பயணித்த விமானம், ஹெலிகாப்டர், கார்களுக்கான செலவுகளை மத்திய அரசு செய்ததா?

    * தனிப்பட்ட பயணமாக இருந்தால், போக்குவரத்து செலவுகளை பிரதமரிடம் இருந்து வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதா?

    * தனிப்பட்ட பயணம் என்றால் எந்த கட்டணமும் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த விதிகளின் கீழ் பிரதமர் பயன்படுத்தினார்?

    * சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா?

    * பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
    • எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவா திக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

    அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

    மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

    இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
    • இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    எங்கள் எய்ம்ஸ் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இப்பதிவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடிக்கு அடிக்கல் நாட்டிய செய்தி வெளியான நாளிதழ் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    • நேற்று இரவில் இருந்தே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
    • உரிய பாஸ் இல்லாமல் பொதுமக்கள் சிலர் கமிஷனர் அலுவலக மாடிகளில் சுற்றுவதாக புகார் எழுந்தது.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கதவுகள் இன்று காலையில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் அதிகாரிகளின் கார்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டன.

    போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்த வழக்கு ஒன்றில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகவும் அது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வர இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் பரவியது. இதன் காரணமாகவே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு பணிபுரியும் காவலர்கள் சிலர் தெரிவித்தனர். நேற்று இரவில் இருந்தே கமிஷனர் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிறகு வழக்கம் போல அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அமலாக்கத்துறையினர் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏன் வரப் போகிறார்கள்? யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றார். கமிஷனர் அலுவலகத்தின் கதவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே மூடப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    உரிய பாஸ் இல்லாமல் பொதுமக்கள் சிலர் கமிஷனர் அலுவலக மாடிகளில் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

    • சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    வடலூர்:

    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி (பேழை) மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர்வலம் தொடங்கியது.

    இதனை கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சமூகத்தினர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு சென்ற போது வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும் இதைத்தொடர்ந்து செங்கால் ஓடையில் நைனார்குப்ப கிராமத்தை சேர்ந்தவர்களும், பூக்கள், பழங்களுடன் வரவேற்றனர்.

    இவர்கள் செல்லும் வழியில் கருங்குழி கிராமத்தினரும் பழங்களுடன் வரவேற்றனர். கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவிலிலும், பொதுமக்கள் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

    மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் தாம்பாளதட்டில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

    பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையினுள் கொண்டு செல்லப்பட்டது. அறைக்கும் முன்வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் தொடங்கியது,

    பகல் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதனை பல ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

    திரு அறை தரிசனத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெய்வேலி போலீஸ் சரகத்தின் சார்பில் டி.எஸ்.பி. சபிபுல்லா, மேற்பார்வையில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கள், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • காகா கூட்டம் ஆந்தையை கொத்தி கொல்ல முயன்றது.
    • உடனடியாக வனத்துறையினரை அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி சிவலுரில் விஜயன் என்பவரது வீட்டுக்கு கூரையில் நேற்று ஒரு அரியவகை ஆந்தை சிக்கி கிடந்தது.

    இதைப் பார்த்த காகா கூட்டம் அதனை கொத்தி கொல்ல முயன்றது. இதைப்பார்த்த விஜயன் காக்கையிடம் இருந்து காப்பாற்றி சாதுர்யமாக ஆந்தையை பிடித்தார்.

    இவரது அண்ணன் ஆசிரியர் ஜெயராஜ் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வீடியோ மூலம் அது வைரலானது. உடனடியாக நாசரேத் அருகில் உள்ள கச்சினா விலை வனத்துறை அலுவலர் கனிமொழி இதை பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினரை அனுப்பி அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது களஞ்சிய ஆந்தை என்றும். பகலில் இதன் செயல்பாடு இல்லாததால் பகலில் காக்கை உட்பட மற்ற பறவைகள் இதனை ஓட ஓட விரட்டும் என்றும் இரவில் இந்த களஞ்சிய ஆந்தைக்கு நன்றாக கண் தெரியும் என்றும். மற்ற பறவைகளை இது இரவில் ஓட ஓட விரட்டும் என்றும் கூறினர். 

    • 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் யாகசாலை பணிகள் தொடர்ந்து 45 நாட்களாக நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதில் மூலவர், அம்பாள், முருகப்பெருமானுக்கு நவகுண்ட யாகசாலை, பாதிரி அம்மன், காலபைரவர் ஆகிய மூர்த்திகளுக்கு பஞ்ச குண்ட யாகசாலை மற்றும் 37 பரிவார வேதிகை என யாகசாலை ஆகம விதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலை குறித்து அதன் அமைப்பாளர் மயிலாடுதுறையை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது அரண்மனை யாகசாலை எனப்படும். 220 அடி நீளம், 100 அடி அகலத்தில் 79 குண்டங்கள், 43 வேதிகைகள் என அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆகமவிதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது. 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. தற்போது 4-வது தலைமுறையாக யாக சாலை அமைக்கும் பணிகளை செய்து வருகின்றோம்.

    கோவை கோனியம்மன் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரி ஆதீனம், திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைத்த புண்ணியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச செல்கிறார்கள். டெல்லி தலைவர்கள், கே. எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் செல்கிறார்கள்.

    கடந்த முறை தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த பட்சம் 9 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆளும் தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் பங்கீட்டில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    எனவே நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி தலைவர்கள் நேரில் அமர்ந்து பேச முடிவு செய்கிறார்கள். எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


    இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கையை உறுதி செய்து விடுவார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    • 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

    வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ×