என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நூற்றுக்கணகான போலீசார் குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
    • 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    சென்னை:

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சமநிலை வேலைக்கு சம ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் முற்றுகையிட ஆசிரியர்கள் அணி அணியாக திரண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை பள்ளி கல்வி அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் பிரதான கதவுகளை மூடி இருந்தனர்.

    நூற்றுக்கணகான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    ஆனாலும் போராட்டக்காரர்கள் நுழைவு வாசலை முற்றுகையிட்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) சார்பில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பொதுச்செயலாளர்கள் ரங்கராஜன், முத்துச்சாமி, வின்சென்ட், பால்ராஜ், மயில், தாஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளுக்கு வழங்கும் உதவி போல உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் 1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாக உள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணன் என்று உரிமையோடு அழைப்பார்.

    தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்படும் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு டெல்லி அரசியல் அத்துபடி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அகில இந்திய தலைவர்கள்-மத்திய மந்திரிகளுக்கு பரிச்சயம் ஆனவர்.

    83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். டெல்லி அரசியல் நகர்வு முழுவதையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு தொகுதியை தக்க வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கிவிட்டு அந்த இடங்களில் புதுமுகங்களை நிறுத்தலாமா? என்று ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்த வகையில் 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அவ்வாறு ஒரு சூழல் அமைந்தால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் முன் நிறுத்தப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சியில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் படப்பை மனோகரன் தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதல் கடுமையாக உழைப்பவர் என்று பெயர் எடுத்தவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.

    கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் இரவு-பகல் பாராமல் முன்னின்று நடத்துபவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் அன்பை பெற்றவர்.

    பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். படப்பை மனோகரனை முன் நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    • அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.
    • எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.

    ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கவில்லை.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில், இடம் பெற்றுள்ளதா? அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தனர்.

    கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ப்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அமெரிக்காவில் 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

    சென்னை விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    நான் தக் லைப் முன்னேற்பாடுகளுக்காக, அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.

    இன்னும் இரண்டு தினங்களில், நல்ல செய்திகளுடன் நான் உங்களை சந்திக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்தி.

    ஏனென்றால் நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை. இங்கிருந்து தான் உருவாக்க வேண்டும்.

    நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது எல்லா தகவல்களையும் கூறுகிறேன். இரண்டு நாட்களில் அந்த வாய்ப்பு மீண்டும் அமையும்.

    எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நான் நிச்சயமாக கூறுவேன்.

    காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன். இப்போது எதுவும் நான் கூறக்கூடாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள் கட்சியினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது போல 2 அல்லது 3 இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    ஆனால் இதற்கு வாய்ப்பு இல்லை என்பதே தி.மு.க. தலைவர்களின் பதிலாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் தேனி தொகுதியை தவிர 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை 7 அல்லது 8 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் தொகுதிகளில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை கமல்ஹாசன் ஏற்றுக் கொள்வாரா? என்பது நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தான் தெரியவரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.
    • தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

    சென்னை :

    2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கினார். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அப்போது அவரது உரையில்,

    ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு ரூ.9,000 கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது.

    மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.


    தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

    அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது.

    ஏற்றுமதி, மின்னணு பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலம். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி அரசு பயணிக்கும் என்பதை உணர்த்தும் பட்ஜெட் என கூறினார்.

    • வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏராளமான சலுகைகளை வெளியிட்டார். முதல்-அமைச்சரின் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் சலுகை மழையாக அறிவிக்கப்பட்டன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப் பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கி ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதி ஆண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    அதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 22 சதவீதம் மட்டுமே என அறிவித்து உள்ளது. இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

    ஆதவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

    ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு. உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு, அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளித்து உதவும் வகையில், ஒரு புதிய திட்டம் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

    உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள். பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

    இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.

    இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு முறையும் அரசு வெறும் அறிவுப்புகளை வெளியிடுகிறது.
    • வருவாயை பெருக்க முடியாமல் மத்திய அரசு மீது பழிபோடுகிறது தமிழக அரசு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த பின்னர் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசின் திட்டங்களை வேறு பெயர்களில் அறிவிக்கிறார்கள்.

    * ஒவ்வொரு முறையும் அரசு வெறும் அறிவுப்புகளை வெளியிடுகிறது.

    * வருவாயை பெருக்க முடியாமல் மத்திய அரசு மீது பழிபோடுகிறது தமிழக அரசு.

    * அதிகமான கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறினார்.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 46 காவல் நிலையங்கள் திறக்கப்படும்.
    • வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 46 காவல் நிலையங்கள் திறக்கப்படும்.

    வரும் ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

    வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்.

    ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு.

    மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.
    • இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டியில் உள்ள பழமையான ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    இது குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில்

    திருப்பணி செய்பவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணிற்குள் புதைந்திருந்த 2 கல்வெட்டுகளை எடுத்து வைத்திருப்பது கள ஆய்வில் தெரியவந்தது. முதல் கல்வெட்டு கோவில் அதிட்டான கல்பலகையில் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.

    தவச்சதுர்வேதி மங்கலத்து பிரக்மரு நாட்டுச் செட்டியும் நீ என தொடங்கும் முதல் பகுதியில் இக்கோயிலில் இருக்கும் இறைவனின் பெயர் திருவகத்தீஸ்வர முடைய நாயனார் என்பது புலனாகிறது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர்களுக்கு அரசு வழங்கிய நிலம். வடபகுதியில் இருக்கும் பிரக்மாரு நாட்டைச் சேர்ந்த செட்டி என்பவர் கொடுத்த வரியும், பிற நில வரிகளும் கூறுவதாக கல்வெட்டு செய்தி இருக்கலாம். மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் முன் கல்வெட்டு எழுதப்பட்டிருப்பது தெரிய வருகிறது.


    கல்லின் பக்கவாட்டில் உள்ள 2-ம் பகுதி கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவரகத்தீஸ்வரர் உடைய நாயனார் கோவிலில் உள்ள விநாயகருக்கு தினமும் திருவமுது படைப்பதற்காக அரைக்காணி முந்திரிகை அளவுள்ள நிலத்தை மிழலைக் கூற்றத்து நடுநாட்டுச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுவதாக உள்ளது. மிழலைக்கூற்றம் என்பது அறந்தாங்கி வட்டத்து தென்பகுதியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் பகுதியும் கொண்டது ஆவுடையார் கோவில் வட்டாரப் பகுதி. இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி செழிப்புற்றிருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றார்.

    • சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.
    • கைவினைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    * இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

    * சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.

    * மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

    * அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

    * ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

    * முட்டுக்காடு அருகே 3 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்கப்படும்.

    * கைவினைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×