என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது.
    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் வந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. உடனடியாக வினியோகத்தை நிறுத்தவும் என நீதிமன்றம் உத்தரவு.
    • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்.

    தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் நன்கொடையாளர்கள் அளித்த தொகை உள்ளிட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்.

    தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப காலத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நிலையில், அவகாசம் கேட்பது யாரை காப்பாற்றுவதற்கு? என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை தொகுதி எம்.பி.யான ஏ. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.

    அது நவீன அறிவியலின் சாதனை.

    மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

    48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர் பட்டியலுடன் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது.

    * 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    * தொண்டர்கள், மக்கள் கருத்துகளை தேசிய தலைமையிடம் தெரிவிக்க உள்ளோம்.

    * 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம்.

    * உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.

    * 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை தந்துள்ளோம் என்று கூறினார்.

    • உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
    • இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும் 'யக்க்ஷா' கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

    கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்க்ஷா'கலைத் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.


    அதன்படி கங்கா மருத்துவமனையின் இயக்குனர், மருத்துவர் திரு. ராஜ சபாபதி அவர்களும், சமூக வலைதள பிரபலமும், புகழ்பெற்ற திரைப்பட நடிகையுமான அருணா முச்செர்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று தலைமுறைகளாக பாடி வரும் இவர், இதுவரையில் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். சிறந்த கர்நாடக இசைக் கலைஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


    இவர் நிகழ்த்திய இசைவிருந்தில் இவரோடு அஜிங்யா ஜோஷி (தபளா), அபிஷேக் ஷிங்கர் (ஆர்மோனியம்), சாய்பிரசாத் பாஞ்சல் (தம்பூரா) உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். 'யக்க்ஷா' திருவிழாவில் வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

    இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

    • ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநகர போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கல்லூரிக்கு ஒரு பெண் போலீஸ் வீதம் 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் அக்கா திட்டத்துக்கான போலீசார் அடிக்கடி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவிகளுடன் கலந்துரையாடி பொது இடங்களில் வாலிபர்கள் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி தங்களின் செல்போன் நம்பரை கொடுத்து தைரியப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற கல்லூரி மாணவிகள் போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பதால் போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பவ இடங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய முடிகிறது.

    கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா திட்டம் மட்டுமின்றி மாநகரில் இயங்கி வரும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் பெற்றோரை போலீசார் நேரடியாக சந்தித்து பேசி, அந்த பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க செய்து வருகின்றனர்.

    கோவை மாநகரில் அமலில் இருக்கும் போலீஸ் அக்கா மற்றும் ஆபரேஷன் ரீபூட் ஆகிய திட்டங்கள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளை நட்புரீதியில் தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகள் தெரிவித்து உள்ள கருத்துக்களின்படி அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக போலீசார் புறப்பட்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட பணிகள் நடைபெறுகிறது.

    பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வது ஆகிய 3 கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நடைமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன.

    பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் போலீசார் நேரடியாக சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் ரவுண்டானா பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களை விசாரணைக்காக சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவில் (28) என தெரிய வந்தது. 2 பேரும் தற்போது ஈரோடு கொல்லம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக குட்கா பொருட்கள் கொண்டு வந்து ஈரோடு, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள சின்ன, சின்ன வியாபாரிகளுக்கு விற்றது தெரியவந்தது. காரில் மொத்தம் 80 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ந் தேதிகளில் 70 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9, 10-ந் தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதாலும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந் தேதி (நாளை) வியாழக்கிழமை அன்று 270 பஸ்களும், 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 390 பஸ்களும், 9-ந் தேதி (சனிக்கிழமை) 430 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ந் தேதிகளில் 70 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 9 ஆயிரத்து 96 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7 ஆயிரத்து 268 பயணிகளும் சனிக்கிழமை 3 ஆயிரத்து 769 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 9 ஆயிரத்து 11 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி (ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 35 பெருநகரங்களில் மகாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு.
    • சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    சென்னை:

    திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் வருகிற 8-ந் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உள்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் மகாசிவ ராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    8-ந்தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ் விழா ஒளிபரப்பு செய்யப் படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னி லையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    சங்கர் மகாதேவன், குரு தாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பி ரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.

    இது தொடர்பாக பி.வி.ஆர். ஐநாக்ஸ் நிறுவனத் தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், ``மகா சிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கி யத்துவம் வாய்ந்த விழாவாகும்.

    இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழாவை ஈஷா வுடன் இணைந்து முதல் முறையாக வெள்ளித் திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்" என தெரி வித்துள்ளார்.

    இவ்விழாவில் பங்கேற்ப தற்கான டிக்கெட்டுகளை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஈஷா மகாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    • பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை, தனது வீட்டைக் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜ் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற தோடு, பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 8 1/2 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டின் பின்புறமாக வந்த மர்ம நபர்கள் மூங்கில் குச்சியை பயன்படுத்தி, வீட்டின் மீது ஏறி ஓட்டினை பிரித்து, உள்ளே சென்று வீட்டின் கதவினை உட்புறமாக தாள் போட்டு விட்டு திருடி சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக வரதராஜ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    துறையூரின் மைய பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை.
    • சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த செல்வபெருந்தகை, முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.


    அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    • இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
    • பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!

    சென்னை:

    திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மார்ச் 6!

    இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!

    பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!

    அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.

    மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்! என்று தெரிவித்துள்ளார்.


    ×